×

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்

சென்னை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில், ‘திறன்கள்’ எனும் திட்டத்தை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தால் மாணவர்களின் அடிப்படை திறனில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், தேசிய அளவிலான ‘ஏசர்’ மற்றும் ‘என்.ஏ.எஸ்’ ஆகியவற்றின் திறன் ஆய்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழி திறன்களை கொண்டிருப்பதில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், தன்னார்வத்தோடு கற்பித்தல் வழிமுறைகளை உருவாக்கி பயன்படுத்தியும் வருகின்றனர்.

இப்படி, மாணவர்களின் அடிப்படை மொழி திறன்களை வளர்க்கும் வகையில் சில ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் நுட்பங்களை, பிற ஆசிரியர் அறிந்துக் கொள்ளும் வகையில், அவற்றை மொழி வள வங்கியாக உருவாக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல, மாணவர்களின் மொழி திறன்களை மேம்படுத்திட ஒரு புதிய முன்னெடுப்பாக ‘லெவல் அப்’ எனும் தன்னார்வ திட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய அடிப்படை திறன்களை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் குழு மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் ஆசிரியர்களை மாவட்டம் தோறும் அடையாளம் கண்டு, ‘லெவல் அப்’ புலன் குழு எனும் வாட்ஸ் அப் குழுவையும் அமைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துக் கொள்ள முடியும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. வருகிற ஜூன் மாதம் டிசம்பர் மாதம் வரையில் ஒவ்வொரு மாதத்திற்கும் மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழி திறன் இலக்குகள் நிர்ணயித்து, இந்த ஆசிரியர்கள் அடங்கிய குழு செயல்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department of the Government of Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...