×

மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் ரூ.4.44 கோடியில் 9,219 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்: ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் ரூ.4.44 கோடியில் 9,219 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 61. இதில் 2023-24ம் கல்வியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 4,038, மாணவியர்கள் 5,181 என மொத்தம் 9,219 மாணாக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சார்ந்த 2,610 மாணவர்கள் மற்றும் 3,325 மாணவிகள் என மொத்தம் 5935 மாணாக்கர்கள் அடங்குவர்.

இதேபோல் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த 1,415 மாணவர்கள் மற்றும் 1,826 மாணவிகள் என மொத்தம் 3,241 மாணாக்கர்களுக்கும், பிற இனத்தை (ஓ.சி) சார்ந்த 13 மாணவர்கள் மற்றும் 30 மாணவிகள் என மொத்தம் 43 மாணாக்கர்களுக்கும் இந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் 9,219 மாணாக்கர்களுக்கான விலையில்லா சைக்கிள்களின் செலவினத் தொகை ரூ.4 கோடியே 44 லட்சத்து 47,760 ஆகும்.

9,219 மாணாக்கர்களில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 228 மாணவிகளுக்கும், ஸ்ரீபெரும்பதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 113 மாணவர்களுக்கும், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவ, மாணவிகளுக்கும், மாத்தூர் டிஎஸ்கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவ, மாணவிகளுக்கும், மொளச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கும், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகளுக்கும், ஜமீன்தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 174 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 984 சைக்கிள்கள் இன்று (நேற்று) வழங்கப்பட்டன. இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக் கண்ணன், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் ரூ.4.44 கோடியில் 9,219 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்: ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kanchipuram ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...