×

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வியூகம்; ரூ.1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி… வேகம் எடுக்கும் திருப்பூர் தொழில்துறை

1980க்கு பிறகு தொடர்ச்சியான வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக நிலை குலைந்தது. இருப்பினும் விடா முயற்சி மற்றும் உழைப்பால் கடந்த நிதியாண்டில் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகத்தை செய்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13.5% வளர்ச்சியை கண்டுள்ளது. வரும் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கை அடைய முடியும் என்கின்றனர். திருப்பூரின் ஒட்டுமொத்த பின்னலாடை வர்த்தகத்தை 2030க்குள் ஒரு லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டு அதற்கான கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகின்றனர். நீர் நிலைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்திகரிப்பு முறையில் ஆலைகள் செயல்பட துவங்கியதில் இருந்து மரபுசாரா மின் உற்பத்தி, பின்னலாடை துணிகள் மற்றும் கழிவுகளின் மறுசுழற்சி என வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் மேலோங்கி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

பருத்தி ஆடைகள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள், மருத்துவ உபகரணங்கள் என கடந்த 10 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரை செயற்கை நூலிழை எனப்படும் பாலியஸ்டர் துணி வகைகளை ஏற்றுமதி செய்தது. தற்போது சீனா, வங்கதேசம், தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பாலியஸ்டர் துணிகளை இறக்குமதி செய்து வரக்கூடிய நிலையில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தொழில்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். வங்கதேசத்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியாவிலிருந்து பருத்தியை கொள்முதல் செய்து சீனா, வங்கதேசம் நாடுகள் குறைந்த விலைக்கு துணிகளை உற்பத்தி செய்து வந்தது. இதன் காரணமாக, இந்தியா மற்ற நாடுகளுடன் ஜவுளி விற்பனையில் போட்டியிட முடியாத சூழல் நிலவி வந்தது. வங்கதேசத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாக நிலையான வர்த்தகத்தை விரும்பும் வர்த்தகர்கள் இந்தியாவின் வர்த்தக உறவை விரும்புகின்றனர். மேலும் சில நாடுகள் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டக் கூடிய நிலையில் ஏற்கனவே இம்முறையில் செயல்பட்டு வரக்கூடிய திருப்பூர் போன்ற தொழில நகரங்களுக்கு ஆர்டர்கள் பெருக வாய்ப்புள்ளது.

3 ஆண்டுகளாக திருப்பூருடன் வர்த்தக உறவில் இல்லாத வெளிநாட்டு வர்த்தகர்கள் தற்போது ஆர்டர்களை கொடுக்க முன்வந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், ‘உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப திருப்பூர் தொழில் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தியில் ஒவ்வொரு நிறுவனமும் 20 சதவீதம் பங்கு செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக கூடிய சூழல் உள்ளது. வங்கதேசத்திலிருந்து பெருமளவு பின்னலாடை ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி வர துவங்கியுள்ளது. அதற்கேற்றவாறு தொழிற்சாலைகளை கட்டமைத்து வருகின்றோம். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இவற்றின் காரணமாக 2030ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி வர்த்தக இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இம்முயற்சியில் வெற்றி அடைய மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தொழில் துறையினரின் கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும்’ என்றார்.

 

The post புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வியூகம்; ரூ.1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி… வேகம் எடுக்கும் திருப்பூர் தொழில்துறை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்