×
Saravana Stores

மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

சென்னை: மழைக்காலங்களில் அதிகாரிகள் செல்போனை “சுவிட்ச்ஆப்” செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் சென்னை மண்டல 15 பொறுப்பு அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், அடையாளம் காணப்பட்ட அனைத்து தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்கள் தரை மட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில் நிறுவும் பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும், மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் ‘சுவிட்ச்ஆப்’ செய்து வைக்கக் கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, மழைக் காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும் அவர் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் மண்டலங்களில் 392 மின்மாற்றிகள், 4,444 மின் கம்பங்கள் மற்றும் 2,484 கி.மீ. மின்கடத்திகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர் மற்றும் பகிர்மானம் இந்திராணி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் சென்னை மண்டல 15 பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

 

The post மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilbalaji ,CHENNAI ,Electricity ,Senthil Balaji ,Kanchipuram ,North East Monsoon ,
× RELATED முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் நன்றி..!!