×

திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் 4 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் சுரங்கபாதை பணி நிறைவேறுமா?

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டு அண்ணாமலை நகரில் உள்ள ரயில்வே கேட் வழியாக சுற்று வட்டாரத்தில் உள்ள ராஜாஜி நகர், கார்கில் வெற்றி நகர், பாலகிருஷ்ணா நகர், கிராம தெரு, ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தினர். அடிக்கடி கேட் மூடப்படுவதால் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசு, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். ஆம்புலன்ஸ், ஆட்டோ மற்றும் குடிநீர் லாரிகளும் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து மக்களின் சிரமத்தை போக்க கடந்த 2021ம் ஆண்டு 28 கோடி ரூபாய் செலவில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக அங்குள்ள 17 வீடுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகளை துவக்குவதற்கு பூஜையும் போடப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் முடங்கிக் கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அண்ணாமலை ரயில்வே கேட் வழியாக போக முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுரங்கப்பாதை பணிகள் குறித்து கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் ரயில்வே, நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். ‘’ஏற்கனவே திட்டமிடப்பட்ட நான்கு மீட்டர் உயரத்துக்கு பதிலாக 2.7 மீட்டர் உயரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திட்ட வரைவுகளில் மாற்றம் செய்து அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கூறியதாவது;
மண் சரிவு ஏற்படுவதால் உயரத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர். உயரத்தை குறைத்தால் பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். எதற்காக திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதனுடைய முழு பலன் மக்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் மண் சரிவை தடுக்க முடியவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிகாரிகள் சரியாக திட்டமிடாததால் கடந்த 4 வருடங்களாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. எனவே, சுரங்கபாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் 4 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் சுரங்கபாதை பணி நிறைவேறுமா? appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur Annamalai ,Thiruvotiyur ,Chennai Thiruvotiyur ,Zone 7th Ward ,Annamalai Nagar ,Rajaji Nagar ,Kargil Victory Nagar ,Balakrishna Nagar ,Grama Street ,Rajeshwari Nagar ,Dinakaran ,
× RELATED எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி...