×

ஆன்மிகம் பிட்ஸ்: நிறம் மாறும் மீனாட்சி; கல்யாண வரமருளும் கண்ணன்..!!

கல்யாண வரமருளும் கண்ணன்

தென்காசிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில், இலத்தூரில் நவநீதகிருஷ்ணர் அருள்கிறார். ஒரு முறை இந்தக் கண்ணனை தரிசித்தவர்கள் அடுத்த முறை தரிசிக்க வருவதற்குள் வாழ்வில் முன்னேற்றம் அடைகின்றனர் எனும் நம்பிக்கை நிலவுகிறது. இவரை தரிசனம் செய்தால் திருமணம், ஆரோக்கியம், தொழில், குடும்ப சந்தோஷம் என வாழ்வு வளம் பெறுவதாக சொல்கிறார்கள்.

ஒரே கோயிலில் நான்கு தாயார்கள்

பாளையங்கோட்டையில் உள்ள ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் மூலவர் வேதநாராயணப் பெருமாளுக்கு அருகே ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அமர்ந்த கோலத்திலும், வேதவல்லி, குமுதவல்லி இருவரும் நின்ற கோலத்திலும் காட்சியளிக்கிறார்கள்.

பிரச்னை தீர்க்கும் அபிஷேகம்

ஆத்தூர்-கள்ளக்குறிச்சி வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது சொர்ணபுரீஸ் வரர் திருக்கோயில். பஞ்சபூத தலங்களுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில் கருவறை மிகவும் உக்கிரமானதாக இருக்கும். கருவறையின் மையத்தில் ஒரு தீபம் துடிப்புடன் எரிந்துகொண்டே இருக்கிறது. தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு, நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், புனிதநீர் போன்ற 13 வகைப் பொருட்களை சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்கிறார்கள். அவை, 16 பட்டைலிங்கத்தின் அடிப்பகுதி வரை வந்து பீடத்தில் ஐக்கியமாகின்றன. ராகு காலத்தில் அபிஷேகம் செய்வதால் அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகம்.

நிறம் மாறும் மீனாட்சி

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகேயுள்ளது கல்லு மடை. இங்கேயுள்ள திருநாகேசுவரமுடையார் கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் நிறம் மாறும் இந்த அம்மன் எழுந்தருளியிருக்கும் ஆலயம் 1300
ஆண்டுகள் பழமை வயந்ததாகும்.

பாவங்கள் போக்கும் பாதாள நந்தி

கும்பகோணம்-மயிலாடுதுறை வழியில் உள்ளது திருவாலங்காடு. இறைவன், ஆலங்காட்டீசர். இறைவி, உண்டார் குழலம்மை. மூன்றாம் குலோத்துங்கன் இக்கோயிலைக் கட்டியதாக வரலாறு. இங்குள்ள நந்தியம்பெருமான் பூமியில் அழுந்தி பாதாள நந்தியாகக் காட்சியளிக்கிறார். பிரதோஷ காலத்தில் இவருக்கு அறுகம்புல் சாத்தி வழிபட்டதால் முன்வினைப் பாவங்கள் பாதாளத்தில் அமிழ்ந்து விடும் என்பது ஐதீகம்.

கூழாங்கல் பிரார்த்தனை

சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேமலை அடிவாரத்தில் ஒரு புளிய மரத்தடியில் அருள்பாலிக்கிறார் முனியப்பன் சாமி. இக்கோயிலில் இவருக்கு அருகில் கூழாங்கற்கள் நிரம்பிய தட்டு உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முனியப்பனை வணங்கி கண்ணைக் கட்டிக்கொண்டு, தட்டில் இருக்கும் கூழாங்கற்களை குத்து மதிப்பாக அள்ளுகின்றனர். பிறகு கண்களை திறந்து கையில் இருக்கும் கற்களை எண்ணிப் பார்க்கிறார்கள். கற்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வந்தால், நினைத்த காரியும் கைகூடும் என்பது நம்பிக்கை.

தாளம் இல்லா சம்பந்தர்

மயிலாடுதுறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சித்தர்காட்டில் இறைவன் பிரம்மபுரீஸ்வரராகவும், இறைவி திரிபுரசுந்தரியாகவும் தரிசனமளிக்கின்றனர். இத்தலம் சம்பந்தர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தர் கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். அதனால் அவர் கையில் தாளம் இல்லை. பிராகாரத்தில் சமயக்குரவர்கள் நால் வரும் நின்றபடி இருக்க, சேக்கிழார் அமர்ந்தபடி கைகூப்பி காட்சியளிப்பது வித்தியாசமானது.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ஆன்மிகம் பிட்ஸ்: நிறம் மாறும் மீனாட்சி; கல்யாண வரமருளும் கண்ணன்..!! appeared first on Dinakaran.

Tags : Meenakshi ,Kannan ,Kalyana Varamarulum ,Kannan Tenkasi ,Navaneethakrishna ,Lathur ,
× RELATED ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...