ஆன்மிக உணர்வு நமக்கு எப்படிப்பட்ட மனதைத் தரும்?
– சுகுமாறன், வயலூர் – திருச்சி.
இதற்கு விவேகானந்தர் சொல்லுகின்ற பதிலை உங்களுக்கு நான் தருகின்றேன். ஆன்மிக மனம் உள்ளவர், எதையும் எதிர்கொள்ளும் திடத்தோடு இருப்பார். ‘‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’’ என்ற வரியை நினைத்துப் பாருங்கள். ‘‘என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்துவிடாதே’’ என்கிறார் விவேகானந்தர். ஆன்மிகம் கற்றுத்தரும் பாடம் இதுதான். வாழ்க்கையை மிக எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் கலைதான் ஆன்மிகம் என்பதை மறந்துவிடக்கூடாது.
தீபத்தை ஏற்றிவைத்து தீபத்தின் பக்கத்தில் உட்காரக் கூடாது என்று சொல்கிறார்களே?
– அனுராதா முரளிதரன், சிதம்பரம்.
வேறு ஒன்றும் காரணம் இல்லை. நாம் தீபத்துக்கு பக்கத்தில் உட்கார்ந்தால் அதன்மீது சாயலாம். அல்லது நம்முடைய துணிமணிகள் அதன்மீது பட்டு விபத்து நேரலாம் அல்லது நம்முடைய மூச்சுக் காற்றினால் தீபம் அணையலாம். நம்முடைய கை, கால்கள் அசைக்கும் போது தீபம் கீழே விழலாம். தீபம் என்பது மங்கலகரமான காரியத்தைக் குறிக் கக்கூடிய ஒரு குறியீடு. இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்தால், அபசகுனமாக மனதுக்கு கஷ்டமாக இருக்கும் அல்லவா. அதனால்தான், ‘‘தள்ளி உட்கார்’’ என்றார்கள்.
வெறும் ஏட்டுப் படிப்பு கடவுளை அடைய உதவுமா?
– ஆதவன், திருப்பூர்.
ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. கடவுளைப் பற்றிய படிப்பு, கடவுளைக் கொண்டு வந்து சேர்க்காது. இனிப்பு என்று எழுதிய காகிதத்தை எத்தனை முறை தான் நாக்கில் வைத்தாலும் இனிக்காது. அதனால்தான் சுய அனுபவமாக நம்முடைய ஆன்றோர்கள் தங்களுடைய தெய்வ அனுபவத்தை எழுதி வைத்தார்கள். அதற்கு உதாரணமாகத்தான், ‘‘நான் கண்டு கொண்டேன்’’ ‘‘என் நாவுக்கே’’ என்று சுய அனுபவமாக சொல்லி வைத்தார்கள். காரணம், முயற்சி செய்யாமலேயே, சில பேர் எனக்கு அந்த அனுபவம் இல்லையே என்று சொல்வார்கள். அது மட்டும் இல்லை, தெய்வீக அனுபவம்கூட அவரவர்களுக்கு வேறுபடுவது உண்டு.
எத்தனையோ மகான்கள் இருந்தும் இந்த மனித குலம் தெளிவடையவில்லையே, என்ன காரணம்?
– பிரசாத்குமார், தேனி.
நாம், கருத்துக் களைவிட, பெரும்பாலும் கருத்து சொன்னவரையே பார்க்கிறோம். அவரையே வணங்குகின்றோம். அவருடைய கருத்துக்கள் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. அதை பின்பற்றவும் முயல்வதில்லை. காரணம், கருத்துக்களை பின்பற்றுவதைவிட சொன்னவரைப் பாராட்டுவதும் வணங்குவதும் நமக்கு எளிதான விஷயமாக இருக்கிறது. இதை ஒரு அறிஞர் மிக அழகாகக்கூறினார். ‘‘துறவி ஒரு திசையை நோக்கி கை காட்டினால், மக்கள் திசையைப் பார்க்காமல் அவருடைய கைவிரல்களையே பார்த்துக்கொண்டிருந்தனர்’’ உண்மையில் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி முன்னேற முடியும்?
தொகுப்பு: அருள்ஜோதி
The post ஆன்மிக உணர்வு நமக்கு எப்படிப்பட்ட மனதைத் தரும்? appeared first on Dinakaran.