×
Saravana Stores

எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைப்பு: பொதுமக்கள் புகார்

ஸ்ரீபெரும்புதூர்: எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எறையூர் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. தற்போது, இந்த பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் துவங்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த தொழிற்சாலைகளுக்கு மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழைநீர் கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலைகள் அமைக்க சவுடு மண் தேவைப்படுகிறது. இதனை சாலை பணிகளுக்கு டெண்டர் எடுத்த நிறுவனம் உள்ளூர் நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு, அதே பகுதியில் உள்ள சிப்காட் நிலம், தனியாருக்கு சொந்தமான இடம் மற்றும் ஏரியிலிருந்து அனுமதியின்றி மண் எடுத்து சாலை அமைத்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எறையூர் சிப்காட்டில் சாலை அமைப்பதற்கு டெண்டர் எடுத்தவர்கள் சிப்காட் இடம், தனியார் பட்டா நிலம் மற்றும் எறையூர் ஏரியை ஒட்டி மண் எடுத்து சாலை அமைத்து வருகின்றனர். இது குறித்து சிப்காட் திட்ட அலுவலர், வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து, கான்ட்ராக்டரிடம் கேட்டதற்கு, சாலை அமைப்பதற்கு முன் தேவைப்படுகிறது. இது அரசு வேலை அதனால் சிப்காட் அதிகாரிகள் சொன்ன இடத்திலிருந்து மண் எடுத்து சாலை அமைத்து வருகிறோம். அரசு வேலைக்காகத்தான் மண் எடுக்கிறோம் எந்த தகவல் வேண்டுமானாலும் சிப்காட் திட்ட அலுவலரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். இதுகுறித்து சிப்காட் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிப்காட் பகுதியில் இருந்து சாலை அமைப்பதற்காக மண் எடுத்துள்ளனர்.

இந்த தகவல் தெரிந்து நாங்கள் காண்ட்ராக்டரை கண்டித்தோம். தற்போது தொழிற்சாலையில் இருந்து வீணாகும் மண் எடுத்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார். மண் அள்ள வேண்டும் என்றால் கனிமவள அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகே மண் எடுக்க வேண்டும். ஆனால், சிப்காட் அதிகாரிகளுடன் கான்ட்ராக்டருடன் கைகோர்த்துகொண்டு இதுபோன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எறையூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைப்பு: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Erayur Chipgat ,Sriperumbudur ,Eraiyur Chipgat ,Chipcot Industrial Park ,Erayur, ,Union ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி