- எஸ்ஐ
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- வேலூர் மாவட்டம்
- குகையநல்லூர் காலனி…
- நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: காவல் உதவி ஆய்வாளரால் அவமானப்படுத்தப்பட்டதால் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தாய்க்கு ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குகையநல்லூர் காலனி பகுதியைச் சேர்ந்த சரத் என்பவரின் சகோதரர், மாற்று சமுதாய பெண்ணை காதலித்துள்ளார். இதன் காரணமாக, சரத்தை மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி பொது இடத்தில் அவமானப்படுத்தியுள்ளார்.
இதை தாங்க முடியாத சரத், மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உதவி ஆய்வாளருக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் இந்த வழக்கு கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், வன்கொடுமை தடைச் சட்டப்படி முழு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சரத்தின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உயிரிழந்த சரத்தின் தாய்க்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் கருணைத்தொகையை பெற உரிமை உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
The post எஸ்ஐ அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை தாய்க்கு ரூ.10.70 லட்சம் இழப்பீடு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.