×

சிவசேனா கட்சி, சின்னம் வழக்கில் வரும் 16ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2019ல் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி பாஜகவில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். இதனால் சிவசேனா இரண்டாக உடைந்தது.

பின்னர் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில், ஷிண்டே தரப்புக்கு தான் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இவ்வழக்கு இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் சிவசேனா கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஏற்கனவே இரு தேர்தல்களில் சின்னம் உள்ளிட்டவை ஷிண்டே தரப்புக்கு வழங்கப்பட்டதோடு எதிர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து முறையீடுகளை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 16ம் தேதிக்கு பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

The post சிவசேனா கட்சி, சின்னம் வழக்கில் வரும் 16ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shiv Sena party ,Supreme Court ,New Delhi ,Maharashtra ,Shiv ,Sena ,BJP ,Congress ,Nationalist Congress Party ,Uddhav Thackeray ,Chief Minister ,Shiv Sena ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...