×

ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவோம் எங்களுடன் வார் செய்யும் அளவுக்கு அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திமுகவில் உறுப்பினர்களை இணைப்பதற்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் பயிற்சி அரங்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பயிற்சி அரங்கை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார். திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமுள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயலியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 2 கோடி மக்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதை எளிதாக்குவது குறித்தும் காணொளி வாயிலாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு மக்கள் இயக்கம், 68,000 பூத் ஏஜண்ட்களை வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களிடையே திமுகவின் திட்டங்கள் எல்லாம் அவர்கள் சென்று சேர்ந்து இருக்கிறதா எனச் சரி பார்க்க இருக்கிறார்கள்.

இனத்தை எதிர்த்துவரும் எதிரிகளையும், இனத்திலேயே இருந்து கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்கும் பயணத்தில் திமுக இறங்கியுள்ளது. ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டப் போகிறோம். இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும். அந்த அணியின் தலைவராக முதல்வர் முக.ஸ்டாலின் இருக்க வேண்டும். அவர் இருந்தால் மட்டும் தான் விடியல் என்ற உண்மையை அவர்கள் இடத்தில் கொண்டு போய் சொல்ல இருக்கிறோம். இந்தப் பயணம் இன்று (ஜூன் 25ம்தேதி) தேதி தொடங்கியுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல்வர் இந்தப் பணியை முழுமையாகத் தொடங்கி வைப்பார். அடுத்தக் கட்டமாக ஜூன் 2ம்தேதி இந்த மாபெரும் பணியை மாவட்ட செயலாளர்கள் கையில் எடுப்பார்கள். அடுத்து ஜூலை 3ம்தேதி இந்த மாபெரும் இயக்கம் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு பொய் சேர்த்து, அதன் மூலம் இந்த இயக்கத்திற்குப் புதிய ரத்ததையும் பாய்ச்சி, உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப் போகிறது திமுக. அதிமுக ஐடி விங்கிற்கும் திமுக ஐடி விங்கிற்கும் இடையே சமூக வலைதளத்தில் நிலவி வரும் கருத்து மோதல் பற்றி கேட்கிறீர்கள். எங்களுடன் வார் செய்யும் அளவுக்கு அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவோம் எங்களுடன் வார் செய்யும் அளவுக்கு அதிமுக ஐடி விங்குக்கு தகுதி கிடையாது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,AIADMK IT Wing ,Minister ,T.R.P. Raja ,Chennai ,DMK IT ,Oraniyil ,Tamil Nadu ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்