வரலட்சுமி விரதம் சாந்திரமான சிராவண மாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படுகின்றது. அதாவது, ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை நாளிலும், ஆடி மாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமையிலுமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வதுதான் வசதியாக இருக்கும். விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையிலுள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்ய வேண்டும். இப்போது மகாலட்சுமி, உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்துக்கு சாத்தி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ர சதம் சொல்லலாம்.
“மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’ என்று மனமுருக வணங்க வேண்டும். பின்னர், பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசிபெற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த ஸ்ரவண மாதம் (ஆடி மாதம்) என்பது
பக்திக்கு மிகவும் உகந்த மாதமாகும். எனவேதான் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை இம்மாதத்தில் வழிபட்டு நிறைய வரங்களை வேண்டிப் பெறுகின்றனர். இந்த ஸ்ரவண மாதமானது, ஜூலை மாதம் கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் முடியும்.
இக்காலம், வட மற்றும் தென் இந்திய மக்கள் வழிபாட்டுக்கென்றே செலவிடும் மிகவும் சிறப்பான காலமாகும். வட இந்தியர்கள், இம்மாதத்தில் தீஜ் பூஜையையும், தென் இந்தியர்கள் வரலட்சுமி நோன்பையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். வரலட்சுமி விரதமானது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதுவே, மகாலட்சுமி பூஜை என்ற பெயரில், வட மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுகின்றன.
வரலட்சுமி விரதத்தின் போது மகாலட்சுமியின் அருளை பெற நிறைய மந்திரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இரண்டு மந்திரங்கள் இந்த விரதத்திற்கான மிகவும் உகந்த சக்தி வாய்ந்த மந்திரங்களாகும். அவைகள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சஹஸ்ரநாமம் போன்றவை ஆகும். “பாக்யாத லட்சுமி’’ மற்றும் “லட்சுமி ராவேமா இன்டிகி’’… போன்ற கன்னட – தெலுங்கு பாடல்கள் தெரிந்தால் பாடலாம். விரதத்தின் முடிவில், மஞ்சள் நூலை (சரடு) கையில் கட்டிக் கொள்வார்கள். எட்டு லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமி என்பதால், அந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளுடன் நடுவில் பூ சுத்தி பூஜையில் வைத்து வழிபட்டு எல்லாரும் தங்களது வலது கைகளில் கட்டிக் கொள்வர்.
இந்தப் பூஜையை புதிதாக ஆரம்பிக்கப் போகிறீர்கள் எனில், இதைப் பற்றி தெரிந்தவர்களிடம் அதன் முறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும். இந்த பூஜையானது, சுமங்கலி பெண்கள் செய்யக் கூடிய பூஜை. திருமணமாகாத பெண்கள், அவர்கள் அம்மாக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு வழிபடலாம்.
நாகலட்சுமி
The post செல்வம் பெருக்கும் வரலட்சுமி விரதம்! appeared first on Dinakaran.