×

தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக சஸ்பெண்டான மாணவன் தேர்வெழுத ஐகோர்ட் அனுமதி

சென்னை: தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவனை தேர்வு எழுத அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வரும் அஸ்லாம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள் தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து அஸ்லாம் என்ற மாணவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நிறுவனத்தின் உதவி பதிவாளராக உள்ள அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி என்னை நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்தனர். சமூகப் பணி 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் எனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீக்கம் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீ.வி. தமிழ்செல்வி, மனுதாரர் மீது யூகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் அவருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, மாணவன் அஸ்லாமை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக சஸ்பெண்டான மாணவன் தேர்வெழுத ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Aslam ,Rajiv Gandhi National Institute of Youth Development ,Sriperumbudur, Kanchipuram district ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...