×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அரங்கேறியது. இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது என்றும், மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

 

The post சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jayaraj ,Pennix ,Sathankulam ,Thoothukudi district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது