×

பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரையில் ஏர் இந்தியா விமான இயக்கத்தை நிறுத்த கோரி மனு: உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரையில் ஏர் இந்தியா விமான இயக்கத்தை நிறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய நிறுவனத்தின் போயின்ங் ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமான நிலையம் அருகே உள்ள கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து நொறுங்கிய கட்டிடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஏர் இந்திய விமானத்தின் பாதுகாப்பு தணிக்கைகள் முழுமையாக நிறைவடையும் வரை விமானத்தை இயக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை வழக்கறிஞர் அஜய் பன்சால் என்பவர் தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த மே 20ம் தேதி அஜய் பன்சாலும் அவரது மனைவியும் டெல்லியில் இருந்து ஏர் இந்திய விமான மூலம் சிகாகோ சென்றதாகவும், விமானம் நடுவானில் பறக்கும் வரை விமானத்தின் ஏசி செயல்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விமானத்தில் இருந்த பொழுதுபோக்கு அமைப்புகள் செயல்படவில்லை என கூறியுள்ள மனுதாரர், இதுகுறித்து ஏர் இந்திய விமான நிறுவனத்திடம் புகார் அளித்த போது 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இது இழப்பீடு வழங்குவது தொடர்பான விவகாரம் மட்டுமல்ல எனவும், ஏர் இந்தியா விமானத்தில் சமீப காலமாக கடுமையான குறைபாடுகள் உள்ளது என மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் கண்டறிந்த பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே ஏர் இந்திய நிறுவனத்திடம் உள்ள போயிங் ரக விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் வரை விமானங்களை இயக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். அதேநேரத்தில் விமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக புதிய ‘பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறையை’ உருவாக்க உத்தரவிட வேண்டும் என்றும், விமானத்தின் இயக்கம் தொடங்குவதற்கு முன்பு விமானத்தின் இன்ஜின் மற்றும் கேபின்கள் உள்ளிட்டவற்றில் கட்டாய சோதனையை நடத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இம்மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

The post பாதுகாப்பு தணிக்கைகள் முடிவடையும் வரையில் ஏர் இந்தியா விமான இயக்கத்தை நிறுத்த கோரி மனு: உச்சநீதிமன்றம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Air India ,Supreme Court ,New Delhi ,Ahmedabad, Gujarat ,London ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...