×

கொள்ளையடிக்க முயன்று தப்பிய வாலிபரை விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் உள்ள காவல்துறை குடியிருப்பு பகுதியில் கொள்ளையடிக்க முயன்று தப்பியோடிய வாலிபரை, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், வீடு வாங்கி உள்ள பலரும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையில் பணி புரிகின்றனர்.

மேலும், பல வீடுகள் காவல் துறையில் அல்லாத வெளி நபர்களுக்கு வாடகை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த குடியிருப்பு வளாகத்தில் பெரும்பாலும் வெளி ஆட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று பகல் 11 மணியளவில் சந்தேகத்திற்கிடமான ஒருவர், இந்த வளாகத்திற்குள் சுற்றுவதாக குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சங்க செயலாளர் அய்யப்பன் மற்றும் ஊழியர்கள், குடியிருப்பு வளாகம் முழுவதும் சுற்றி வளைத்து தேடினர். அப்போது, வீட்டின் பின்பக்க மாடியிலிருந்து கழிவுநீர் குழாய் வழியாக இறங்கி, தப்பியோட முயன்ற வாலிபரை, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் விரட்டிச்சென்று பிடித்து தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிடிப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது. அவனிடமிருந்து தங்க செயின், மோதிரம், வளையல், கொலுசு போன்றவை பறிமுதல் செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கொள்ளையடிக்க முயன்று தப்பிய வாலிபரை விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Melakottaiyur ,Tamilnadu ,Kelambakkam ,
× RELATED சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக...