×

சாலைகள் சீரமைப்பு பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும் சாலைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். சீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக முடிக்க தகுந்த நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘‘நம்ம சாலை செயலி” மூலமாக பொதுமக்கள் அளித்த புகார்களின் எண்ணிக்கை மற்றும் தீர்வு காணப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தற்போது ‘‘நம்ம சாலை செயலி” மூலமாக பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் குறித்து அளிக்கும் புகார்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் வசதி உள்ளதால், அனைத்து துறைகளின் சாலை விவரங்களை ‘‘நம்ம சாலை செயலியின்” கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நம்ம சாலை செயலியின் கீழ் அனைத்து துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் உள்பட துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சாலைகள் சீரமைப்பு பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Highways Department ,Municipal Administration ,Dinakaran ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...