×

தரமற்ற கட்டுமானத்தால் திறப்பதற்கு முன்பே ஆற்றுடன் அடித்து செல்லப்பட்ட சாலை: ராஜஸ்தான் பாஜக அரசு மீது குற்றச்சாட்டு

ஜுன்ஜுனு: ராஜஸ்தானில் தரமற்ற கட்டுமானத்தால் திறப்பு விழாவிற்கு முன்பே ஆற்றுடன் சாலை ஒன்று அடித்து செல்லப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள பகுலி மற்றும் ஜஹாஜ் ஆகிய கிராமங்களை, ஜுன்ஜுனு மற்றும் சிகார் நகரங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் நோக்கில், புதிய மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சாலை, முறையான திறப்பு விழாவிற்காகக் காத்திருந்தது. இந்தச் சாலையானது, அப்பகுதியில் உள்ள கட்லி ஆற்றின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்த ஆற்றில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகளும், சட்டவிரோத மணல் மற்றும் சரளைக் கல் கொள்ளையும் நடைபெற்று வருவதாகவும், அதனைத் தடுக்க மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பெய்த 86 மி.மீ அளவிலான கனமழையால், கட்லி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து, ஆற்றின் கரையில் இருந்த புதிய சாலையின் பெரும் பகுதியை வெள்ளம் அரித்து, அடித்துச் சென்றது. திறப்பு விழாவுக்காகக் காத்திருந்த சாலையே ஆற்றுக்குள் கரைந்து செல்வதைக் கண்ட அக்கம் பக்கத்து கிராம மக்கள், அதனை ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஒரு வீடியோவில், சாலை சரிந்து விழும்போது மின்கம்பம் ஒன்றும் ஆற்றுக்குள் சரிந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம், சாலையின் கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்துப் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து செய்து வருகின்றனர். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், கமிஷனுக்காக தரமற்ற சாலை கட்டுமானத்தை அமைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

The post தரமற்ற கட்டுமானத்தால் திறப்பதற்கு முன்பே ஆற்றுடன் அடித்து செல்லப்பட்ட சாலை: ராஜஸ்தான் பாஜக அரசு மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Rajasthan BJP government ,Jhunjhunu ,Rajasthan ,Pakuli ,Jhaj ,Jhunjhunu district ,Sikar ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...