×

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு

* மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது
* விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சாவூர்: கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருக்கு விளக்கம் கேட்டு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாப்பநாட்டில் கடந்த 12ம் தேதி பகல், 22 வயது இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன், (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்களுடன் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை நேற்று ஒரத்தநாடு உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு சிகிச்சை அளிக்க பணியில் இருந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நீதிபதி அழகேசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஏன் மறுக்கப்பட்டது? அந்த மருத்துவர் யார்? அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

The post பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Thanjavur ,Pattukottai Government Hospital ,Dinakaran ,
× RELATED மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு...