சென்னை: சென்னையில் மிக கனமழை பெய்த போதும் சில மணி நேரத்தில் தண்ணீர் வடிந்தது என்றும், சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ள நிலையில், 100 தெருக்களில் தான் மழைநீர் தேங்கியது, 16,000 ஊழியர்கள் இரவு, பகல் பாராது பணியாற்றினர் என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதனை விரைந்து வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்துள்ளது. மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை முழுவதும் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொண்டதால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. மழை பெய்த உடன் வேகமாக வடிந்து விடுகிறது. தி.நகர் பசுல்லா ரோடு, வடக்கு உஸ்மான் சாலை, மேற்கு மாம்பலத்தில் பல்வேறு தெருக்களில் மழைநீர் அதிகமாக தேங்கியது. அங்கும் இப்ேபாது வேகமாக மழைநீர் வடிந்து வருகிறது.
அடுத்ததாக அம்பத்தூர், கொளத்தூர் மற்றும் ஐசிஎப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அங்கு போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் மழைநீரை அகற்றும் பணிகளில் 16,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை 819 கி.மீ., தூரம் மழைநீர் வடிகால் அமைத்த காரணத்தால் தான் மற்ற இடங்களில் மழைநீர் தேங்கவில்லை.
சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் இருந்த போதிலும், 100 தெருக்களில் மட்டும் தான் மழைநீர் தேங்கியது. அதிலும் 70 இடங்களில் முழுமையாக மழைநீர் தேங்கியதை அகற்றிவிட்டோம். மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது வழக்கம். ஆனால் எவ்வளவு சீக்கிரமாக வடிகிறது என்பதையும் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும். முன்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். மழை பெய்யும் போது தேங்கும் நீர் சில மணி நேரத்தில் வடிந்து விடுகிறது என்பது தான் உண்மை. சேதமடையும் சாலைகளை உடனடியாக பேட்ஜ் ஒர்க் செய்து சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் அகற்றம்
மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்னையே காரணம். சென்னையில் மாம்பலம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது.
தி.நகர் பகுதியில் மிக விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போதைக்கு ரங்கராஜபுரம் பகுதி சுரங்கப்பாதை மட்டுமே நீரில் மூழ்கியுள்ளது. அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சைதாப்பேட்டை, உள்ளிட்ட அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய நீர் விரைந்து வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது, என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
* அவசர உதவி எண்கள்
மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா எண் 1913, எண்கள் 044-2561 9204, 044-2561 9206 மற்றும் 94454 7720 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
The post மிக கனமழை பெய்தபோதும் சில மணி நேரத்தில் வடிந்தது சென்னையில் 35,000 தெருக்களில் 100ல் தான் மழைநீர் தேங்கியது: 16,000 ஊழியர்கள் இரவு, பகல் பாராது பணி, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.