×

ரயில் நிலைய வளாகத்தில் சிலைகள் நினைவு சின்னங்கள் வைக்கக்கூடாது: சுற்றறிக்கை உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: ரயில் நிலைய வளாகங்களில் சிலைகள் மற்றும் சின்னங்கள் வைக்கக் கூடாது என சுற்றறிக்ைக உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையை சங்க காலத்தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் சின்னமாக மீன் சின்னம் இருந்தது. அதன் நினைவாக மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் 15 அடி உயரத்தில் 3 மீன்களின் சிலை கடந்த 1999ல் நிறுவப்பட்டது. ரயில் நிலைய சீரமைப்பு பணிகளுக்காக 3 ஆண்டுக்கு முன் மீன் சிலைகள் அகற்றப்பட்டன.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது, பணிகள் முடிந்ததால் மீண்டும் அதே இடத்தில் மீன்கள் சிலை நிறுவப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் கூறியபடி மீன்கள் சிலை வைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தெற்கு ரயில்வே தரப்பில், மீன்கள் சிலையை வைத்த தொழில் வர்த்தக சங்கத்தினரே விரிவாக்க பணியின் போது எடுத்து விட்டனர். ரயில் நிலைய பகுதிகளில் தலைவர்களின் சிலைகள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது என ரயில்வே துறையின் சுற்றறிக்கை உள்ளது. இதனால், வேறு பகுதியில் மீன் சிலைகள் வைத்துக் கொள்ளுமாறு கடந்த 2018லேயே தொழில்வர்த்தக சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மீன்கள் சிலை வைத்தது, எடுத்தது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஜூலை 8க்கு தள்ளி ைவத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ரயில் நிலைய வளாகத்தில் சிலைகள் நினைவு சின்னங்கள் வைக்கக்கூடாது: சுற்றறிக்கை உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : iCort ,Madurai ,Igort Branch ,Igourd ,branch ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை