×

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இந்த நிலையில் ஹரிசங்கர் பாண்டே என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘இந்து கடவுளான ராமரை கற்பனையான புராண நபர் என சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசி உள்ளார். அது இந்துக்களின் உணர்வை புண்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. எனவே ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட மனுவானது வாரணாசியில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதால், உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்போவது கிடையாது. இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023ன் சட்ட விதிகளுக்கு கீழ் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படியென்றால் ஒன்றிய, மாநில அரசுகள் அல்லது மாவட்ட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்’’ என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ஹரிசங்கர் பாண்டே என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

The post ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,NEW DELHI ,US ,Harishankar Pandey ,Varanasi Court ,Dinakaran ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...