×

விசாரணை நீதிமன்றம் அனுப்பி வைத்த சம்மனுக்கு தடை கேட்ட ராகுலின் மனு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

லக்னோ: விசாரணை நீதிமன்றம் அனுப்பி வைத்த சம்மனுக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய் மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, சீன வீரர்களுடனான மோதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல்காந்தி தெரிவித்தாக கூறப்படுகிறது. அவரது கருத்து இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக கூறி, உதய் ஷங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அலகாபாத் கீழமை நீதிமன்றம், ராகுலுக்கு எதிராக சம்மன் அனுப்பியது. கீழமை நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ராகுலின் வழக்கறிஞர் பிரான்ஷு அகர்வால் ஆஜராகி, ராகுலுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரைப் படித்தாலே, அவர் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை எனத் தோன்றுவதாக வாதிட்டார். மேலும், ராகுல்காந்தி லக்னோவைச் சேர்ந்தவர் அல்ல என்பதால், இந்தப் புகாரின் அடிப்படையில் அவரை சம்மன் செய்வதற்கு முன், குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கீழமை நீதிமன்றம் விசாரித்திருக்க வேண்டும் என்றும், முதல் பார்வையில் விசாரணைக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே சம்மன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனால் ராகுலின் மனுவை எதிர்த்து, மாநில அரசின் வழக்கறிஞர்கள் குழு, ‘இந்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத்தக்கது அல்ல’ என்று வாதிட்டனர்.

சம்மன் உத்தரவை அமர்வு நீதிமன்றத்தில் சவால் செய்ய மனுதாரருக்கு மாற்று வழி இருப்பதாகவும், புகார் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆராய்ந்தால், முதல் பார்வையில் ராகுலுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான லக்னோ அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘ராகுல்காந்திக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க முடியாது’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அதனால் விசாரணை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

The post விசாரணை நீதிமன்றம் அனுப்பி வைத்த சம்மனுக்கு தடை கேட்ட ராகுலின் மனு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Samman ,Court of Inquiry ,Allahabad Eicourt ,Lucknow ,Rahul Gandhi ,Congress ,Bharat Jodo ,Dinakaran ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...