×

நானும், ராகுலும் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நல்ல அறிகுறி: ஆட்டநாயகன் விராட்கோஹ்லி பேட்டி

கொழும்பு: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதன் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்து வந்த விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு நேற்று மதியம் துவங்கியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் சாதனை படைத்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய அணியில் கோஹ்லி 122 ரன், கே.எல். ராகுல் 111 ரன்களை குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியில், பக்கார் ஜமான் 27 ரன், அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது தலா 23 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா 228 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட்கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் சதம் அடித்த கிங் கோஹ்லி கூறியதாவது:- அணிக்காக உதவ வேண்டும் என்பதுதான் எனது முதல் பணி. இதற்காகத்தான் நான் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறேன். இன்று (நேற்று) நானும் கே எல் ராகுலும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். எனது பணி சிங்கிள்ஸ் எடுத்து ரன்களை சேர்ப்பது தான். சிங்கிள்ஸ், டபுள்ஸ் என எளிதாக ரன் எடுப்பதை நான் கர்வமாக கருதுகிறேன். சதம் அடித்த பிறகு இன்று சில வித்தியாசமான ஷாட்டுகளை ஆடினேன். குறிப்பாக ரிவர்ஸ் ராம்ப் சாட்டில் பவுண்டரி அடிக்கும் போது அதற்கென ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் நான் அப்படி விளையாடவில்லையோ என்று தோன்றியது. அதை மீண்டும் பார்க்கும்போது எனக்கு அது மோசமான ஷாட் போல் தெரிந்தது. நானும் கே எல் ராகுலும் பாரம்பரிய கிரிக்கெட்டை பின் தொடர்கிறோம்.

நாங்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை. நல்ல ஷாட்கள் மூலம் ரன் எடுக்க முயற்சி செய்தோம். ராகுலும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப் நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். ராகுலின் கம்பேக் மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கடினமாக உழைத்து ரன்கள் ஓடிய போது மகிழ்ச்சியாக இருந்தாலும் நாளை மீண்டும் மதியம் விளையாட போகிறோமே என்று நினைத்தேன். என்னுடைய 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து மூன்று நாள் நான் விளையாடியது இல்லை. அதுவும் நாளை (இன்று) இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறோம். இது எங்களுக்கு புதிய சவால் தான். இந்த சவாலை வெற்றிகரமாக முடிப்பேன் என எண்ணுகிறேன். அதிர்ஷ்டவசமாக நான் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். எனவே ஓய்வே இன்றி தொடர்ந்து விளையாடுவது என்பது எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இலங்கையில் மிகவும் வெப்பமாக இருக்கிறது. வரும் நவம்பர் மாதம் வந்தால் எனக்கு 35 வயதாகிவிடும். எனவே எனது உடல் நலத்தையும் ஓய்வையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் நடக்க உதவியாக இருந்த ஆடுகள பராமரிப்பாளர்களுக்கும் மைதான ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய பணி மகத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நானும், ராகுலும் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நல்ல அறிகுறி: ஆட்டநாயகன் விராட்கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Virat Kohli ,Colombo ,16th Asia Cup Cricket Super 4 round ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி...