×
Saravana Stores

தரமான மின் விநியோகத்திற்காக தமிழ்நாட்டில் 2,500 புதிய மின்மாற்றிகள் ரூ.200 கோடியில் நிறுவப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு எரிசக்தி துறையில் வெளியிட்ட அறிவிப்புகள்:
* தரமான மின்சார விநியோகத்திற்காக, 11 கி.வோ மற்றும் 22 கி.வோ மின்னழுத்த விகிதங்களில் 25 கேவிஏ, 63 கேவிஏ, 100 கேவிஏ, 200 கேவிஏ மற்றும் 250 கேவிஏ ஆகிய பல்வேறு திறன்களைக் கொண்ட 2,500 எண்ணிக்கை புதிய மற்றும் கூடுதல் விநியோக மின்மாற்றிகளை, ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் மின் சுமையை குறைப்பதற்கும், 19 திறன் மின்மாற்றிகள் ரூ.217 கோடி செலவில் மேம்படுத்தப்
படும்.
* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூரிய சக்தி மேற்கூரை திறனை, மின் நுகர்வோர் தகவல்கள் கண்டறிய இணையவழி மென்பொருள் உருவாக்கப்படும்.
* மின்வாரிய களப்பணியாளர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக மின்சார சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மின் கட்டமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா எனபதை கண்டறியும் எச்சரிக்கை உணரி சாதனங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* மின் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், மின் கம்பிகளை மின்காப்பு செய்திட சிலிகான் ஓவர்ஹெட் லைன் இன்சுலேஷன் ஸ்லீவிஸ் நிறுவும் பணிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாடு முழுவதும் தென்னந்தோப்புகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளின் வழியாக செல்லும் மின் பாதைகளில், மின் தடை ஏற்படுவதை தடுத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், வனப்பகுதிகளில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்கவும் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மின் காப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மூன்று புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் நிறுவுதல் மற்றும் ஆறு 33/11 கி.வோ துணை மின் நிலையங்களிலுள்ள மின் மாற்றிகள் திறன் ரூ. 75 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* யானை வழித்தடங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, அடர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மின் மாற்றிகளின் தாழ்வழுத்த பகுதியில் மோல்டட் கேஸ் சர்கியூட் பிரேக்கர் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ், ரூ.4.8 கோடி மதிப்பீட்டில் 500 பட்டயப் பொறியாளர்களுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் ஒரு வருட கால தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.
* மின்வாரிய பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த, இந்த நிதியாண்டில் ரூ. 1.5 கோடி செலவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
* தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 4ன் கொதிகலனின் சி மற்றும் டி உயர நிலைகளில் 8 எண்ணிக்கை செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்களை கொள்முதல் செய்து நிறுவி பரிசோதனை செய்து இருக்கும் பணிகள் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* ஒவ்வொரு பேரூராட்சிக்கும் அம்ரூத், ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.20 கோடியில் குடிநீர் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் (திமுக) பேசுகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அறிவுசார் மையத்தையும் குளித்தலை நகராட்சியிலே அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அறிவுசார் மையம், அங்கு அமைந்திருக்கிற பேருந்து நிலைய மேம்பாட்டுத் திட்டம், இன்னும் அந்தப் பகுதியிலே சொல்கிற பணிகளை நிச்சயமாக முதல்வரின் அனுமதியைப் பெற்று, நிதிநிலைக்கேற்ப இந்த ஆண்டு மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

உறுப்பினர் இரா.மாணிக்கம்: குளித்தலை தொகுதியில் மருதூர் மற்றும் நங்கவரம் ஆகிய இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. அந்த பேரூராட்சிகளுக்கு அம்ரூத் 2.0 திட்டத்தின்மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் கே.என். நேரு: காவேரி கரையோரம் கொள்ளிடம் கரையோரம் அமைந்திருக்கிற நாகப்பட்டினம் வரை எல்லா மக்களுக்கும் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் அந்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன; குளித்தலை இடையிலே அமைந்திருக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த ஆண்டு முதல்வர் அதற்கு என்று ரூ.800 கோடி நிதியொதுக்கி தந்து, குளித்தலை தொகுதி மற்றும் மணப்பாறை தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளையும் இணைத்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதியளித்திருக்கிறார். எனவே, அந்தப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். ஒவ்வொரு பேரூராட்சிக்கும் அம்ரூத் திட்டத்திலும், ஜல் ஜீவன் திட்டத்திலும், கிட்டத்தட்ட ரூ.20 கோடி என்ற அளவிலே குடிநீர் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது”என்றார்.

The post தரமான மின் விநியோகத்திற்காக தமிழ்நாட்டில் 2,500 புதிய மின்மாற்றிகள் ரூ.200 கோடியில் நிறுவப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Thangam Thanaras ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Thangam ,Southern State Energy Department ,Tangam ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி...