×

பெயர்பலகைகள் இல்லாததால் தவிக்கும் பொதுமக்கள் பெருமாள்புரம் சி காலனியில் சிதிலமடைந்து கிடக்கும் சாலைகள்

மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்குமா?

நெல்லை : பெருமாள்புரம் சி காலனி பகுதியில் சாலைகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. தெருக்களை குறிக்கும் அறிவிப்பு பலகைகளும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.நெல்லை மாநகராட்சியின் பெரிய நகர்ப்புற பகுதிகளில் பெருமாள்புரம் முக்கிய இடம் வகிக்கிறது.

கடந்த 1965ம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்டு, நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் துவங்கும் பெருமாள்புரம் குடியிருப்பு பகுதிகள் ஏ, பி, சி காலனிகள் மற்றும் ஏராளமான விரிவாக்கப்பகுதிகளுடன் இணைந்து என்ஜிஓ காலனி, திருமால்நகர், ரெட்டியார்பட்டி என தொடர்ச்சியாக குடியிருப்புகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பிடமாக பரந்து விரிந்து கிடக்கிறது.

மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இங்கு பிரதான சாலைகளை மட்டுமே மாநகராட்சி புதுப்பித்துள்ளது. நகரின் உட்புற தெருக்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்
படாமல் சாலை இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு சிதிலமடைந்து கிடக்கிறது. புதிய பைப் லைன், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக பெருமாள்புரம் சி காலனி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. முன்பு மின்சார வாரிய அலுவலகம் அமைந்திருந்த 10வது தெரு கடந்த பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை நிலவுகிறது. மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ போன்ற வாகனங்கள் திக்கித் திணறியபடியே பயணிக்கின்றன.

இதேபோல் பெருமாள்புரம் சி காலனி பகுதியில் தெருக்கள் குறித்த அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படவேயில்லை. இதனால் வெளியிடங்களிலிருந்து இப்பகுதிக்கு வருவோர் தாங்கள் செல்ல வேண்டிய தெரு, குடியிருப்பு பகுதியை அடையாளம் கண்டு செல்வதற்கு கடும் இன்னலை சந்திக்கின்றனர்.

எனவே இப்பகுதியில் சாலைகளை விரைந்து புணரமைப்பதோடு, தெருக்களின் பெயரை குறிப்பிட்டு அறிவிப்பு பலகையும் வைக்க மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பெயர்பலகைகள் இல்லாததால் தவிக்கும் பொதுமக்கள் பெருமாள்புரம் சி காலனியில் சிதிலமடைந்து கிடக்கும் சாலைகள் appeared first on Dinakaran.

Tags : Perumalpuram C Colony ,Nellai ,Perumalpuram ,Nellai Corporation.… ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...