×

அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம்; 400 பேர் கைது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப், பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்களுக்கு எதிராக அவரது அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்த, போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். மேலும், லாஸ் ஏஞ்சல்சில் அந்நகர நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேரை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில், 330 பேர் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்கள் எனவும், 157 பேர் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், போராட்டத்தில் இருந்து கலைய மறுத்த 203 பேரும், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த, கலிஃபோர்னியா கவர்னரின் எதிர்ப்பை மீறி, சுமார் 4,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்களையும், ராணுவத்தின் ‘மரைன்’ பிரிவை சேர்ந்த 700 வீரர்களையும் அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார். இந்த போராட்ட சூழலை பயன்படுத்தி சிலர் அங்குள்ள ஆப்பிள் ஸ்டோர் மற்றும் முக்கிய வணிக வளாகங்களுக்குள் முகமூடி அணிந்து கொண்டு புகுந்து, கடைகளை சேதப்படுத்தி விலையுயர்ந்த பொருள்களை திருடி சென்றனர். இந்த போராட்டம் லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமின்றி, ஆஸ்டின், சிகாகோ, டல்லாஸ், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பரவி வருகிறது.

 

The post அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம்; 400 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,President Trump ,Washington ,US ,Trump ,Dinakaran ,
× RELATED ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர்...