மஸ்கட்: இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பிரதமர் மோடி தனது ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணங்களை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஓமன் புறப்பட்டுச்சென்றார். மஸ்கட் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சயீத்தை சந்தித்து பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து விவாதித்தார்.
பின்னர் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா -ஓமன் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை தொடர்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமனின் வர்த்தகம், தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைஸ் பின் முகமது அல் யூசெப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தமானது சந்தை அணுகலை மேம்படுத்தவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக பொருளாதார மறுசீரமைப்பு நடைபெறும் நேரத்தில் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் வர்த்தக பல்வகைப்படுத்தல் மற்றும் விநியோக சங்கிலியின் மீள்திறனை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் அடுத்த காலண்டர் ஆண்டில் முதல் காலாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையமான அமெரிக்காவின் 50 சதவீத வரிகளை இந்தியா எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் ஓமனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு அமெரிக்காவுடன் ஓமன் ஒப்பந்தம் செய்தது. அதன் பின் ஒமன் கையெழுத்திட்ட முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். 98 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு: இந்தியா-ஓமன் இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதியில் 98 சதவீத பொருட்களுக்கு ஓமனில் வரிஇல்லாத அணுகல் கிடைக்கும். ஓமனுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 99.38 சதவீதத்தை உள்ளடக்கியது.
* ரத்தினங்கள், நகைகள், ஜவுளி, தோல், காலணிகள், விளையாட்டுப்பொருட்கள், பிளாஸ்டிக், தளவாடங்கள், விவசாயப்பொருட்கள், பொறியியல் பொருட்கள்,மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளுக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகின்றது.
* 97.96 சதவீத தயாரிப்பு வகைகளுக்கு உடனடி வரி விலக்கு வழங்கப்படுகின்றது.
இந்தியா வழங்கும் வரி சலுகை: இந்தியா தனது மொத்த வரிப் பிரிவுகளில் 77.79 சதவீதத்துக்கு வரி தளர்வுகளை வழங்குகின்றது. இது மதிப்பின் அடிப்படையில் ஓமனில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் 94.81 சதவீதத்தை உள்ளடக்கியது.
* பேரீச்சம் பழம், பளிங்கு கற்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட ஓமனின் பொருட்களுக்கு பெரும்பாலும் வரி விகித ஒதுக்கீடு அடிப்படையிலான வரி தளர்வு வழங்கப்படுகின்றது.
வரி சலுகை இல்லை: இந்தியா தனது நாட்டின் நலனகளை பாதுகாப்பதற்காக சில உணர்திறன் வாய்ந்த தயாரிப்புக்களுக்கு எந்த சலுகைகளும் வழங்காமல் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வைத்துள்ளது.
* பால் பொருட்கள், தேநீர், காபி, ரப்பர், மற்றும் புகையிலை பொருட்கள் உட்பட விவசாய பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள், நகைகள் மற்றும் பல அடிப்படை உலோகங்களின் கழிவுகள் இதில் அடங்கும்.
* ஓமன் வரி ரத்து செய்த பொருட்கள் பட்டியல்
இயற்கை தேன், புதிய முட்டைகள், முந்திரி, உருளைக்கிழங்கு, எலும்பில்லாத இறைச்சி மற்றும் பேக்கரி பொருட்கள் போன்ற இந்தியாவின் பல விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஓமனில் வரி விலக்கு கிடைக்கும். சீஸ், தயிர், பால் மற்றும் கிரீம், உறைந்த மீன், வெண்ணெய், இறைச்சி, யோகர்ட், ரொட்டி, பேஸ்ட்ரி, கேக்குகள், சாக்லேட், சர்க்கரை மிட்டாய்கள் மற்றும் மினரல் வாட்டர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், எண்ணெய்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கும் வரி இல்லை. பாஸ்மதி அரிசி, புழுங்கல் அரிசி, வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சோயாபீன் மாவு, இனிப்பு பிஸ்கட்கள், முந்திரிப் பருப்புகள், கலப்பு மசாலாப் பொருட்கள், வெண்ணெய், மீன் உடல் எண்ணெய், இறால் மற்றும் நண்டு தீவனத்திற்கும் வரி இல்லை. புதிய முட்டைகளுக்கான பூஜ்ஜிய வரி அனுமதி, ஓமனின் முட்டை இறக்குமதியில் இந்தியாவின் 98.3 சதவீத பங்கை உறுதிப்படுத்தும். இது ஓமனை இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக மாற்றுவதோடு, பிராந்திய போட்டியாளர்களை விட இந்தியாவிற்கு ஒரு தெளிவான விலை கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்தியாவில் விலை குறையும் பொருட்கள்
இந்தியா அளித்த வரி குறைப்பால் ஓமனிலிருந்து மலிவான விலையில் பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்யலாம். ஏனெனில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 2,000 டன் பேரீச்சம்பழங்களுக்கு வரி விலக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓமனின் இரண்டு பாரம்பரிய தயாரிப்புகளான கம் அரபிகா (உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் பிராங்கின்சென்ஸ் (ஊதுபத்தி மற்றும் வாசனை திரவியத் துறையில் பயன்படுத்தப்படுகிறது) ஆகியவற்றுக்கும் இந்தியா வரிச்சலுகைகளை வழங்கி உள்ளது.
* ஓமனின் உயரிய விருது
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவதற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடிக்கு ஓமனின் தனித்துவமான சிறப்புமிக்க விருதான ‘தி ஆர்டர் ஆப் ஓமன்’ விருதை சுல்தான் ஹைதம் பின் தாரிக் வழங்கி கவுரவித்தார். எத்தியோப்பியாவின் கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பிய, மற்றும் குவைத்தின் ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் போன்ற சமீபத்திய விருதுகளை பெற்ற பிரதமர் மோடியின் விருது பட்டியலில் இது புதிய சேர்க்கையாகும்.
