புழல்: சிறையில் இருந்து பரோலில் வந்து தப்பி ஓடிய கைதியை விசாகப்பட்டினத்தில் போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 5வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (48). இவரை, கஞ்சா வழக்கில் கடந்த ஆண்டு மதுரை அடுத்த திருப்பாலை போலீசார் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரது தந்தை ஆறுமுகம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு இறந்து விட்டதால், அவருக்கு இறுதிச்சடங்கு, கடந்த 30ம் தேதி செங்குன்றத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க அனுமதி வேண்டும் என நீதிபதியிடம் பரோல் கேட்டு பரமேஸ்வரன் விண்ணப்பித்தர். அதன்பேரில், அவருக்கு 2 நாள் பரோல் கிடைத்தது. பரமேஸ்வரன் மதுரை சிறையில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 6 போலீசார் பாதுகாப்புடன் செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது வீட்டிலிருந்த பரமேஸ்வரன் யாரும் பார்க்காத நேரத்தில் அங்கிருந்து உறவினர் ஒருவரின் பைக்கில் தப்பினார்.
இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய பரமேஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினத்தில் பதுங்கி இருந்த பரமேஸ்வரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
The post பரோலில் வந்தபோது தப்பிய கைதி விசாகப்பட்டினத்தில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.