×

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி கார்டுகளுக்கும் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் இன்று முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்க பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிவித்தார். அதில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற ரேஷன்கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கலுக்கு முன்பே ரூ.1000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை காலை முதல் நேற்று வரை வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், நிறைய பேரின் பெயர்கள் அதில் இடம் பெறாததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக தமிழ்நாடு அரசு பரிசீலித்தது. இதையடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து டோக்கன் கிடைக்காதவர்கள் அரிசி குடும்ப அட்டையை தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் காண்பித்து பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. வருகிற 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெறலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமினா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

* ஆழ்வார்பேட்டையில் இன்று முதல்வர் வழங்குகிறார்
பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதாம்பாள் காலனி ரேஷன் கடையில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் தொடங்கி வைக்கின்றனர்.

The post இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி கார்டுகளுக்கும் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...