×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

அதன் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன. நான்காம் கட்டமாக 27.1.2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குச்
சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள்.

இன்வெஸ்ட் ஸ்பெயின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன்வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்கள். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு குறித்தும். தமிழ்நாடு அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுப் பாராட்டியது. ‘ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய- ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2024 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17.616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து. ரூ.51.157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இதன் பயனாக கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் ஏறத்தாழ 31 இலட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.9.74 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்க ஆகஸ்ட் 27 அன்று தொடங்கிய அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இன்று சென்னை வந்து சேர்ந்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணத்தில் உடன் சென்று வந்த தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது
வலைதளப் பதிவில்,

“இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என அனைவராலும் போற்றப்படும் திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமது அரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது. இந்தப் பயணத்தில் 7,616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) போடப்பட்டுள்ளன. இதற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலை வாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் . வெகு விரைவில் மேலும் பல முதலீடுகள் வந்து குவிய இருக்கின்றன என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மீண்டும் சொல்கிறேன்:

இது ஆரம்பம் மட்டுமே. இப்பயணத்தின் போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. யார் யார் உறுதியாகப் பணியைத் துவக்குவார்கள் என்பதைப் பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆகையால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வதைப் போல இந்தப் பயணத்தின் அனைத்து ஒப்பந்தங்களும் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளன.

நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு என்பதைவிட அவை எந்த அளவிற்கு முதலீடாக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டில் பரவலான அளவில் நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதில்தான் மிகுந்த கவனமாக இருக்கிறார்! எனவேதான் முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இன்னும் பல நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிலையிலும் அவற்றின் உறுதித்தன்மை குறித்த கூடுதல் விவரங்களைப் பெற்று, அதன் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடலாம் எனப் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவிலும் சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம்! இந்தியாவின் முதன்மை முதல்வரான திராவிட நாயகர் அதனைச் சாதித்துக் காட்டுவார்”. என்று வலைதளப் பதிவில் அமெரிக்கப் பயணத்தின் வெற்றி குறித்து விளக்கியுள்ளார்.

The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,K. Stalin ,TRP Raja Proud ,Chennai ,Tamil ,Nadu ,Commerce Minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வளர்ச்சிப்பணிகளை...