×

பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது ; கிலோ ரூ.10க்கு விற்பனை

 


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில்,தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி, கடந்த மே மாதம் இறுதியிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இறுதியிலிருந்து தொடர்ந்து ஒன்றரை மாதத்திற்கு மேலாக பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்ததால் தக்காளி நல்ல விளைச்சலடைய துவங்கியது. இதனால் இந்த மாத துவக்கத்திலிருந்து பல கிராமங்களில் தக்காளி அறுவடை துவங்கியது.மேலும் கடந்த சில வாரமாக, கிணத்துக்கடவு மற்றும் உடுமலை,தளி,குடிமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால்,அதன் விலை சரிந்தது.

கடந்த இருவாரத்துக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.18 முதல் ரூ.22 வரை என தரத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு விற்பனையானது.ஆனால், கடந்த சிலநாட்களாக உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்ததாலும், விசேஷ நாட்கள் குறைவால், மீண்டும் விலை சரிந்தது. நேற்று பொள்ளாச்சி மார்க்கெட்டில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களில், தக்காளி வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதுடன், விலை போகாமல் தேக்கமான நிலை ஏற்பட்டது. வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது ; கிலோ ரூ.10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pollachi market ,Pollachi ,Dinakaran ,
× RELATED ஓணம் பண்டிகை எதிரொலி: பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம்