×

பிளே ஸ்கூல் விதிகளை அமல்படுத்த தடை

மதுரை: பிளே ஸ்கூல் தொடர்பான விதிகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிளே ஸ்கூல் சங்கத்தின் சார்பாக, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு: தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பிளே ஸ்கூல்கள் உள்ளன. இவற்றில் 1.80 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். 30 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த 2023ல் புதிய விதிகளை வகுத்து அரசாணை வெளியிட்டது. இந்த விதிகள் கடுமையானதாக உள்ளது. அனுமதி பெறுவதிலும், பிளே ஸ்கூல்களை நடத்துவதிலும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியதுள்ளது. புதிய விதிகளின்படி பிளே ஸ்கூல்களை மூடுமாறு அதிகாரிகள் தொந்தரவு செய்கின்றனர். 2015க்கு முன்பு பிளே ஸ்கூல்கள் சமூக நலத்துறையின் கீழ் இருந்து வந்தது.

அப்போது அனுமதி பெறுவது எளிமையாக இருந்தது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பிளே ஸ்கூல்கள் வந்த பிறகு, பிளே ஸ்கூல் நடத்தும் கட்டிடத்துக்கு உரிமையாளருடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டன. எனவே, பிளே ஸ்கூல் தொடர்பான தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) சட்டம் 2018ன் பிரிவுகளையும் மற்றும் தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) 2023 விதிகளையும் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். பிளே ஸ்கூல்களை மூடவோ, மூடுமாறு தொந்தரவு செய்யவோ கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், தமிழ்நாட்டில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தனர். மேலும் மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post பிளே ஸ்கூல் விதிகளை அமல்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu Play School Association ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு