×

பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால்தலை வெளியிடப்படும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிடப்படும் என திருச்சியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களின் வரலாறுகளையும் ஆவணப்படுத்துவது, அனைத்து தலைவர்களின் புகழையும், அவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய சேவையையும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியை பிரதமரின் வழியில் செய்து வருகிறோம். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து தலைவர்களையும் போற்றுகின்ற விதமாக அரசாங்கத்தின் சார்பாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்தரையர் மணி மண்டபம் அமைக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டதற்கு, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், ‘‘தமிழ்நாட்டில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம். முக்கியமாக, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என பல சமுதாய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு சதய விழா கொண்டாடும் நேரத்தில், இதே இடத்தில் முத்தரையர் தபால் தலை வெளியிடப்படும்,’’என்று தெரிவித்தார்.

The post பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால்தலை வெளியிடப்படும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Perumpidugu Mutharaiyar ,Union Minister ,L. Murugan ,Trichy ,Emperor ,Mutharaiyar ,Mani Mandapam ,Trichy Central Bus Stand… ,Perumpidugu ,
× RELATED சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்...