- பெரியார்
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்
- உதயநிதி ஸ்டாலின்
- அண்ணா நூற்றாண்டு நூலக மண்டபம்
- கொட்டூர்புரம், சென்னை
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், பெரியார் நினைவுச் சொற்பொழிவினை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தன்னுடைய 95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர். பெரியாருடைய கொள்கைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக இளைஞர்களுக்கு மிகமிக அவசியமானவை. குறிப்பிட்ட சிலர்தான் படிக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர்தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்றவர்கள் எல்லாம் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இன்றைக்கு அந்த நிலைமை எல்லாம் மாறி இருக்கின்றது.
பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் அண்ணா, கலைஞர், இன்றைக்கு முதல்வர் ஆகியோர் செயல்வடிவம் கொடுத்தனர். சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என அண்ணா சட்டம் கொண்டு வந்தார். மகளிருக்கு சொத்தில் சம உரிமை என்பதை கலைஞர் சட்டமாக்கினார். காவல்துறை, ராணுவத்தில் பெண்கள் பணிக்கு வரவேண்டும் என்று பெரியார் ஆசைப்பட்டார், குரல் கொடுத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக 50 வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்த பெரியார் இறுதி வரை போராடினார். அதை நிறைவேற்றும்விதமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஏன் பெண்களும் அர்ச்சகராக ஆகலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியவர் முதல்வர்.
பெரியார் நம்மை விட்டுப் பிரிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றைக்கும் அவருடைய கருத்துகளும் சிந்தனைகளும் நம்முடன் தொடர்புடையதாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, எழிலன், பிரபாகர ராஜா, சேகர், பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
The post பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.