×
Saravana Stores

தமிழ்நாட்டு மக்கள் மதித்தால் மதிப்பார்கள், இல்லையென்றால் மிதிப்பார்கள் மோடி இங்கேயே தங்கினாலும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம் செல்வகணபதியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல், மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் ஆகும். தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயம் செய்வோம். மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி வழங்கவில்லை. தேர்தலின்போது மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

அவர் தமிழ்நாட்டிலேயே வந்து தங்கினாலும் பிஜேபி ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சுயமரியாதை பார்ப்பவர்கள், மதித்தால் மதிப்பார்கள். இல்லையென்றால் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். பிரதமரை மிஸ்டர் 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரி நாம் கட்டுவதில் ஒரு ரூபாய்க்கு வெறும் 29 பைசாதான் திரும்பத் தருகிறார். பிஜேபி ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு மூன்று ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது.

பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ரூ.7 தருகிறார். தமிழகத்திற்கு மட்டும் குறைவாக தருகிறார்கள். நம்முடைய நிதியுரிமை, கல்வி உரிமையை பறித்து விட்டார்கள். 2010-ல் நீட் தேர்வு வந்தது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்தார். அதனையடுத்து ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. அதன் பின்னர் ஆட்சியில் இருந்தவர்களை அடிமையாக பயன்படுத்திக் கொண்டு வந்துவிட்டனர்.

பிரதமர் பேன்சி டிரஸ் போட்டி போல வந்து திருக்குறளை பேசுகிறார். அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல், இந்தி, சமஸ்கிருதத்திற்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன் சரி, வேறெதுவும் செய்யவில்லை. நான் செங்கலை காட்டி பிரசாரம் செய்வதை எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும்வரை நான் செங்கலை காட்டிக் கொண்டுதான் இருப்பேன்.

யார் பிரதமர் வேட்பாளர் என்று கேட்கிறார்கள். யார் பிரதமர் என்பதை விட, யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அணி வென்றால் யார் பிரதமர் என்பதை அவர் சொல்ல வேண்டும். ஜூன் 3ம் தேதி கலைஞரின் 101-வது பிறந்தநாள் வருகிறது. தேர்தல்களில் தோற்காத ஒரே தலைவர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 நாம் ஜெயிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டு மக்கள் மதித்தால் மதிப்பார்கள், இல்லையென்றால் மிதிப்பார்கள் மோடி இங்கேயே தங்கினாலும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,Minister ,Udayanidhi Stalin ,DMK ,DM Selvaganapathy ,Salem ,Omalur ,
× RELATED போக்குவரத்து ஊழியர்கள் போனஸ்...