×

பயணிகளுக்கு கொலை மிரட்டல் அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

ஊட்டி: பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பஸ் கண்டக்டரை போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று சஸ்பெண்ட் செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதிக்கு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ் புறப்பட்டு சென்றது. கூடலூர் சென்றபோது பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் பஸ்சில் ஏறி உள்ளனர்.
அவர்கள் பந்தலூர் அடுத்த சேரம்பாட்டி அருகே உள்ள காப்பிகாடு பகுதியில் இறங்க வேண்டும்.

மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறக்கூடாது எனக் கூறி மாணவ, மாணவிகளை கண்டக்டர் இறக்கி விட்டுள்ளார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் தானே, கொஞ்சம் அனுசரித்து இறக்கி விடுங்கள் என பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் கண்டக்டரிடம் கூறி உள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கண்டக்டர், பயணிகளிடம் தகராறு செய்ததுடன், ‘‘போட்டு தள்ளிருவேன்; பாத்துக்க’’ என பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சம்பவத்தை பஸ்சில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊட்டி கிளை-1 கண்டக்டர் பாபுவை சஸ்பெண்ட் செய்து ஊட்டி மண்டல பொதுமேலாளர் நடராஜன் இன்று உத்தரவிட்டார்.

The post பயணிகளுக்கு கொலை மிரட்டல் அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Transport Corporation ,Nilgiris… ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்