×

கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது . இந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்களும், center median-யில் செடிகளும் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும்.

ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யவில்லை. முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையை பராமரிக்க 563.83 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செலவு செய்யவில்லை.

மேலும் தனியார் நிறுவனம், ஒப்பந்த தொகையை விட கூடுதலான தொகையை சுங்க சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாதத்திற்கு 11 கோடி ரூபாய் சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து, பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் மட்டுமே செலவு செய்து வருகின்றது.

இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தனர். இதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடைக்கு தடை பெற்றனர். இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் முன்பு மீண்டும் விசாணைக்கு வந்தது.

அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பு வழக்கறிஞர், “உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை பெற்று உள்ளோம்” என தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், “கடந்த வாரம் இந்த தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்பட்டு தஞ்சாவூர் நீதிபதி பலத்த காயம் அடைந்தார்.

அவருடன் பயணித்த நபர்கள் உயிரிழந்தனர்” என குற்றம்சாட்டினார். அப்போது நீதிபதிகள், “தேசிய நெடுஞ்சாலை துறை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். அதே வேளையில் இந்த நெடுஞ்சாலையில், குண்டும், குழியான சாலைகளை சீர்படுத்தி மேம்படுத்த வேண்டும்.

CCTV கேமரா பொறுத்துதல், சாலையின் சில இடங்களை வாகனங்களில் வேக கட்டுபாடு உள்ளிட்ட நவீன முறைகளை கையாண்டு, தொடர் சாலை பராமரிப்பை செயல்படுத்த வேண்டும். கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை. ஆனால் பொதுமக்களின் வாகனங்கள் சிறு பிரச்சனை செய்தாலும் அங்கு உள்ளவர்களை வைத்து தாக்கக்கூடிய சூழல் உள்ளது” என்று வேதனை தெரிவித்து வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர் .

The post கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Madurai-Thoothukudi National Highway ,Balakrishnan ,Thoothukudi ,High Court… ,Madurai branch ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...