×

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி உள்நோக்கத்துடன் செயல்படும் தீய சக்திகளை கண்காணித்து தடுக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்துடன் சில சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை தீவிரமாக கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக கலெக்டர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு 3 நாட்கள் நடந்தது.

இதையடுத்து 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடந்தது. நேற்று காலையில் நடந்த கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டபோதும் மாவட்ட ஆட்சியர்களை, காவல் துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து இருக்கிறேன்.

தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாக கொண்டு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்தி காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்கால தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முழுமையாக ஈடுபட வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூகஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சி தலைவர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணித்து, பொய் செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதோடு, அதற்குரிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
நான் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும், இதனை தாண்டியும் பல்வேறு நடப்புகள் குறித்தும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேரவும் உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் செயல்திட்டங்களையும் இங்கு வழங்குங்கள். கருத்துகளை சொல்ல இருப்பவர்கள் சுருக்கமாகவும் – அதே நேரத்தில், தெளிவாகவும் சொல்ல வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து மட்டும் இங்கே கருத்துகளை பதிவு செய்திட வேண்டும். உங்களது கருத்துகளுக்கும் – ஆலோசனைகளுக்கும் மாநாட்டின் இறுதியில் விளக்கங்களை அளிக்கிறேன்என்று பேசினார். இந்த மாநாட்டில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடந்தது. இதை தொடர்ந்து மதியம் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இந்த மாநாடு இன்று 2வது நாளாக நடைபெறும். இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் நிறைவுரை ஆற்றி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

* போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சிறப்பு திட்டம்
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பட்டியலின – பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும். தூத்துக்குடி மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மற்றும் திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது என்று முதல்வர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி உள்நோக்கத்துடன் செயல்படும் தீய சக்திகளை கண்காணித்து தடுக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...