×

நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு அளித்த பரிந்துரையின்படி பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’: மாநில அரசுகள் அமல்படுத்த உள்துறை அமைச்சகம் அனுமதி

புதுடெல்லி: சிறைக் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும்போது அவர்களை கண்காணிக்கும் வகையில் ‘ஜிபிஎஸ்’ கருவி போன்றவற்றை பொருத்தும் நடைமுறையை மாநிலங்கள் பின்பற்றலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறைத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ஒன்றிய உள்துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இந்த நடைமுறையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். கடந்த வாரம், ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் போலீஸார் தொடங்கினர். அதன்படி காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் குலாம் முகமது என்பவருக்கு, ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. அதனால் இம்மாதம் 4ம் தேதி அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது அவரது காலில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டது. இந்த கருவி பொருத்தப்பட்டதின் மூலம், அவரது நடமாட்டத்தை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரமுடியும். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஜாமீனில் விடுதலையாகும் கைதிகளின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. இதேபோல் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய குலாம் முகமதுவின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டதாகவும், அதன்மூலம் அவரது நகர்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்றும் காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றம் செய்த குற்றவாளிகளை, மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும்.

தற்காலிக விடுதலை அல்லது பரோல் விடுப்பில் உள்ள கைதிகளை கண்காணிக்கும் வகையில் அவர்கள் மீது மின்னணு கருவிகளை பயன்படுத்தலாம். அதேபோல் கைதிகள், தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இத்தகைய கருவியை அணிய விருப்பம் தெரிவித்தால், சிறையில் இருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். வெளியில் சென்ற பிறகு விதியை மீறி, கருவியை அகற்றினால் எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அக்கைதியை தகுதி நீக்கம் செய்யலாம். எனவே பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளை கண்காணிக்கும் வகையில், அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை மாநிலங்கள் பொருத்தலாம். அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் பொருந்தும். சிறைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும், சிறைகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பிற்காகவும், பயோமெட்ரிக்ஸ், சிசிடிவி அமைப்பு, ஸ்கேனிங் மற்றும் கண்டறிதல் சாதனங்கள், ரேடியோ அலைவரிசை அடையாளம், வீடியோ கான்பரன்சிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதையும் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சிறை நிர்வாகம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கவும், தரவுத்தளத்தை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். சிறைகளில் செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, ‘செல்லுலார் ஜாமிங்’ அமைக்க வேண்டும். சிறைகளுக்குள் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். போதைக்கு அடிமையானவர்கள், மது அருந்துபவர்கள், முதல் முறை குற்றவாளிகள், வெளிநாட்டு கைதிகள், வயதான மற்றும் பலவீனமான கைதிகள் என்று கைதிகளை பிரித்து தனித்தனியாக அவர்களை தங்கவைக்க வேண்டும். தொற்று நோய் அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மன நோய், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், அதிக ஆபத்துள்ள கைதிகள், குழந்தைகளுடன் பெண் கைதிகள், இளம் குற்றவாளிகளையும் தனித்தனியாக கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தின் சிறப்பு குழு அளித்த பரிந்துரையின்படி பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’: மாநில அரசுகள் அமல்படுத்த உள்துறை அமைச்சகம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : special committee of Parliament ,Interior Ministry ,New Delhi ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள...