×

டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள்

புதுடெல்லி: நடிகர் விஜய்யிடம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 150 கேள்விகளை அவரிடம் துருவி துருவி கேட்டு, எழுத்து மூலம் வாக்குமூலம் பெற்றனர். அவரிடம் பொங்கலுக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இதேபோல், கரூர் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோரும் சிபிஐ விசாரணைக்காக டெல்லியில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஜனவரி 12ம் தேதி ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று காலை விசாரணைக்கு ஆஜராக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், சுமார் 11 மணி அளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இதைத்தொடர்ந்து, பிற்பகல் 11.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரையில் சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில், ‘‘கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் எப்படி இறந்தனர், கால தாமதமாக பிரச்சார இடத்திற்கு வந்தது ஏன்?, அதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதா, காலதாமதம் ஆனதற்கான சரியான காரணங்களை முன்னதாக காவல்துறைக்கு உங்கள் தரப்பில் இருந்து தகவலாக தெரிவிக்கப்பட்டதா, நீங்கள் பிரச்சார இடத்தில் வாகனத்தின் மேலே நின்று பேசும் போது உங்கள் கண் முன்னே பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு உங்களது தரப்பில் எந்தவித உதவியும் செய்யாதது ஏன், கரூர் கூட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக அங்கு அதிகப்படியான கூட்டம் சேர்ந்தது எவ்வாறு, கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது எழுந்துள்ளது.

அதற்கு உங்களது தரப்பின் விளக்கம் என்ன, குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், காலையில் இருந்தே உங்களது கட்சி தொண்டர்கள் ஏன் கூடினர். அதனை இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பவர்கள் கட்டுக்குள் கொண்டு வராது ஏன். குறிப்பாக பிரச்சாரம் நடத்தும் இடத்திற்கு மீறிய கூட்டம் இருப்பதால் உங்களை போக வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிகையும் மீறி நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்கு சென்றீர்கள். கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு யார் பொறுப்பு ஆவார்கள். உங்கள் வாகனம் சென்றதால்தான் அதிக நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் 150 கேள்விகளை விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். விஜய் கூறிய பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக அவரிடம் எழுதி, அதில் ஜோசப் விஜய் என்று கையெழுத்து பெறப்பட்டு வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாராணை மேற்கொண்ட போது, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக கருதப்படும் ஜெகதீஷ் பழனிசாமி, அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, ஸ்ரீ ராஜேந்திரன், நயும் ரஷீர் பண்டிட் வெற்றிவேல், விஷ்ணு ரெட்டி, ராம்குமார், நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தின் உள்ளேயே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று விஜய்யிடம் விசாரணை மேற்கொண்ட போது, அங்கு அவரது தரப்பு வழக்கறிஞர்கள் இருப்பதற்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதி வழங்கி இருந்தனர்.

* போலீசார் குவிப்பு
லோதி எஸ்டேட் பகுதியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலக சாலையில் எப்பொழுதும் சுமார் ஆறு அல்லது ஏழு போலீசார் மட்டுமே காவலுக்காக இருப்பார்கள். ஆனால் நேற்றைய தினம் விஜய் ஆஜராகி இருந்த நிலையில், அந்த சாலை முழுவதும் போலீசாரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் ஆண் பெண் என 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

* 2 முறை சிபிஐ விசாரணையில் சிக்கிய நிர்மல்குமார் ஜோஷி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விவகாரத்தில் நடந்த சம்பவம் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஆயுதப்படை அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் (தற்போது டி.ஜி.பி) மற்றும் அப்போதைய திருச்சி மண்டல ஐஜி நிர்மல்குமார் ஜோஷி ஆகியோரும் நேற்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் டிஐஜியாக இருந்த வருண்குமார், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகு தற்போது வரை அங்கு டிஐஜி நியமிக்கப்படவில்லை. இதனால், டிஐஜி பதவி, அப்போது ஐஜியாக இருந்த நிர்மல்குமார் ஜோஷியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இதனால் கரூர் சம்பவம் நடந்தபோது அவர் அந்த நகரில்தான் இருந்தார். ஆனால் சம்பவ இடத்திற்கு, பலி ஏற்பட்ட பிறகுதான் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அவரிடம் ஏன் பாதுகாப்புக்கு நீங்கள் செல்லவில்லை என்பது உள்பட பல்வேறு கேள்விகள் சிபிஐ தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நிர்மல்குமார் ஜோஷி அதிமுக ஆட்சியின்போது வடசென்னை இணை கமிஷனராக இருந்தார். அந்த நேரத்தில்தான் குட்கா விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில், நிர்மல்குமார் ஜோஷியும் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. குட்கா வழக்கில் சிக்கியவர், தற்போது 2வது முறையாக கரூர் சம்பவ வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் நிர்மல்குமார் ஜோஷி சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* கருப்பு சட்டை அணிந்து வந்த விஜய்
தனது பிரச்சாரத்தின் போது அனைத்து இடங்களிலும் பாஜக எனது கொள்கை எதிரி என்று தொடர்ந்து விஜய் தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய சிபிஐ விசாரணையின் போது பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு நிறத்தில் உடை அணிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த விசாரணை எப்போது?
கரூர் விவகாரம் தொடர்பாக இன்று 2வது நாளாக விஜயிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில் விஜய் தரப்பில் சிபிஐ அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வேறு ஒரு நாள் நீங்கள் அழைக்கும் பட்சத்தில் நான் நேரில் ஆஜராகி விளக்கம் தருகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் கோரிக்கையை ஏற்று சி பி ஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளனர். இது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் விஜய்.

* வெளியில் செல்ல விருப்பமில்லை
நேற்றைய விசாரணையில் இடைவெளியில் மதிய உணவுக்காக பிற்பகல் ஒரு மணி நேரம் விஜய்க்கு வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு வெளியில் செல்ல விருப்பமில்லை என்று அவர் சிபிஐ அதிகாரிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதைத்தொடர்ந்து வெளியில் உணவு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதையடுத்து, வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு விஜய்க்கு வழங்கப்பட்டது.

* தனிமைப்படுத்தப்பட்ட விஜய்
முதல்கட்டமாக நேற்று மாலை நான்கு மணியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், அதைத்தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் விஜய் ஒரு அறையில் தனிமைப்படுத்தி அமர வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரிடம் செல்வதற்கு வழக்கறிஞர் உட்பட யாருக்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

Tags : CBI ,Vijay ,Delhi ,Karur ,New Delhi ,Pongal ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...