×
Saravana Stores

படிப்பு வரமருளும் பரிமுகப்பெருமாள்

முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஓர் எண்ணம் தோன்றியது. அது, பாற்கடலுக்குச் சென்று பரந்தாமனை வழிபட வேண்டும் என்பது. அனைவரும் அவ்வாறு சென்றபோது அங்கே நாராயணனைக் காணாமல் திகைத்தார்கள். சரி, வைகுந்தம் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்றால், அங்கும் ஏமாற்றமே! எங்கே போய்விட்டார் எம்பெருமான்?

பூலோகத்தில் பூமாதேவியும், மார்க்கண்டேயரும் அவரைக் குறித்து தவம் இயற்றுவதால், அவர்களுக்குக் காட்சியளிப்பதற்காக திருமால் அங்கே சென்று விட்டார் என்று தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அனைவரும் பூலோகத்திற்குப் புறப்பட்டு வந்தார்கள். திருவஹீந்திரபுரத்தில் கண்ணாரக் கண்டார்கள். இவர்களுக்கும் திவ்ய தரிசனம் தந்த நாராயணன், அவர்களது விருப்பம் என்னவென்று கேட்டார். அவர்களோ, மார்க்கண்டேயரின் விருப்பமே தம் விருப்பம் என்று பெருந்தன்மையுடன் தெரிவித்தனர். மார்க்கண்டேயரோ கூடுதல் பெருந்தன்மையுடன், தங்களுக்கு சேவை சாதித்த அதே தோற்றத்தில் பூலோகவாசிகள் அனைவருக்கும் காட்சி தரும் வகையில் அந்தத் தலத்திலேயே கோயில் கொண்டு அருளுமாறு பகவானை வேண்டிக் கொண்டார்.

அப்படியே ஆயிற்று.கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தம் இங்கே, இப்போதும், கெடில நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவன் சிவ பக்தனாகத் திகழ்ந்தான். அதனால் விஷ்ணு கோயில்களைப் பொறுத்தவரை பாராமுகத்தோனாக இருந்தான். ஒருமுறை திருவஹீந்திரபுரம் தலத்துக்கு வந்த அவன், இங்கு உறைபவர் திருமால் என்பதால் அவரை தரிசிக்காமல் போக யத்தனித்தான். ஆனால் அங்கே இருந்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள், அது சிவன் கோயில் என்று வலியுறுத்திக் கூற, உள்ளே சென்ற மன்னனுக்கு பெருமாள், பரமேஸ்வரனாகக் காட்சியளித்தார். அதோடு, அரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தையும் அந்த மன்னனுக்கு போதித்தார்.

இதற்கு சாட்சியாக இன்றும் மூலவர் தேவநாத சுவாமியின் விமானத்தில் கிழக்கு திக்கில் பெருமாள் காட்சிதர, தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் நரசிம்மர், வடக்கில் பிரம்மா என்று பிரம்மா – விஷ்ணு – சிவன் என்ற மும்மூர்த்திகளில் சொரூபமாக இங்கே பெருமாள் அமைந்திருக்கிறார். இந்த விமானத்தின் மூலைகளில் சிம்மங்களைக் காணலாம். வழக்கமாக அமையும் கருடனின் இடத்தை இந்தக் கோயிலில் சிங்கம் பிடித்துக் கொண்டிருக்கிறது! பெருமாளின் தோற்றம் இன்னும் இந்தக் கருத்தை உறுதியாக வலியுறுத்துகிறது. ஆமாம், இவர் நெற்றியில் ஒரு கண் துலங்குகிறது; மழு, ஜடாமுடியுடனும் இவர் காட்சி தருகிறார். புஜங்கள் சங்கு-சக்கரத்தைத் தாங்கியிருக்கின்றன.

இத்தகைய அற்புத கோலத்தை அவ்வளவு எளிதாக தரிசித்துவிட முடியாது. தேவநாத சுவாமியின் கவசங்களையும், அலங்காரங்களையும் களைந்து, அவருக்குத் திருமஞ்சனம் செய்விக்கிறார்களே அப்போது மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதம் அது. திருமங்கையாழ்வார், ‘மூவராகிய ஒருவன்’ என்று பாடி இந்தப் பெருமாளைச் சிறப்பித்திருக்கிறார்.திருப்பதி-திருமலை வேங்கடவனுக்கு மூத்தவர் இவர் என்கிறார்கள். அதாவது வேங்கடவன் அவதாரத்துக்கு முந்தியவராம். இந்த தேவநாதனுக்கு எதிரே, உபதேசம் பண்ணும் பாவனையில், ஞான முத்திரையுடன் கருடன் காட்சி தருகிறார்.

மூலவர் சந்நதிக்கு நேர் எதிரே மலை, அதன் பின்னே உத்திரவாஹினியாக கருடநதி பாய்கிறது.தாயார், வைகுண்ட நாயகி. தன் நாயகன் தேவநாதனுக்கு உறுதுணையாக இருந்து தேவர்களைக் காத்ததால் ஹேமாம்புஜவல்லி என்றும் அழைக்கப் படுகிறார். பார் அனைத்திற்கும் அருள் பரிபாலிப்பதால் பார்க்கவி. பிருகு மகரிஷிக்கு அவரது தந்தையார் பிரம்மன் அருளியபடி, பிரம்ம தீர்த்தம் என்ற புஷ்கரணியில், தாமரை மலரின் நடுவில் திருமகள் குழந்தையாகத் தோன்றினாள். அவளை அள்ளி அணைத்த பிருகு மகரிஷி ஹேமாம்புஜவல்லி என்ற திருநாமமிட்டுத் தன் தவச்சாலையில் வளர்த்து வந்தார். அந்தப் பெண் ஸ்ரீமன் நாராயணனையே தியானித்து, அவரையே தன் கணவராக அடைய, சேஷ தீர்த்தக் கரையில் தவம் இயற்றினாள். அதனால் மகிழ்ந்த தேவநாதன் அவள் முன் பிரத்யட்சமானதோடு, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவளைக் கரம் பிடித்தார். இந்தத் தலத்தின் முக்கியமான இரு சிறப்புகள்: 1. ஸ்ரீமந் நிகாமந்த தேசிகர்; 2. ஹயக்ரீவர்.

திருவஹிந்தீரபுரம் – கடலூர்

நிகாமந்த தேசிகர், காஞ்சி, தூப்புல் தலத்தில் பிறந்தவர். ஆனால், நாற்பதாண்டுகள் திருவஹீந்திரபுரத்தில் தங்கி, தனக்கென ஒரு வீட்டையும், கிணற்றையும் அமைத்துக் கொண்டு, வைணவ சம்பிரதாயத்துக்கு அருந்தொண்டாற்றியவர். ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் தன் திருமேனியை உருவாக்கிக் கொண்டது போலவே, இங்கும் தேசிகரும் தன் வடிவத்தை செய்வித்தார். ‘பார்க்க தத்ரூபமாக இருக்கிறது’ என்று பாராட்டிய பலருள் சிற்ப வல்லுநரும் ஒருவர். வெறும் பாராட்டோடு நிற்காமல், ‘இந்த சிலை அச்சு அசலாக உம்மைப் போலவே இருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு உங்களால் உயிரோட்டம் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார் சிற்பி. ‘தொட்டுதான் பாருங்களேன்,’ என்று தேசிகர் அமைதியாக பதில் சொன்னார்.

தன் கைவிரல் நகத்தால் மெல்ல அந்தச் சிலை மீது கீறிப் பார்த்தார் சிற்ப வல்லுநர். உடனே அந்தப் பகுதி ரத்தக் கோடிட்டது! விதிர்விதிர்த்துப் போய்விட்டார் வல்லுநர். தன் ஆணவத்தை மன்னிக்குமாறு தேசிகர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.தேசிகரால், இந்தத் தலத்தில் மிகவும் விரும்பி வழிபடப்பட்டவர், ஹயக்ரீவர். தேவநாதன் கோயிலுக்கு வலது பக்கம் ஒரு மலைமீது கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பரிமுகன். இவரது மந்திரத்தை, கருட பகவான் தேசிகருக்கு உபதேசித்தார். எப்போதும் அந்த மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த இவருக்கு ஹயக்ரீவர் காட்சி தந்ததோடு, அனைத்து வேத சாஸ்திரங்களையும், இந்த ஔஷதகிரி மலையிலேயே கற்பித்தார். இவரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவ மூர்த்தியை இன்றும் தேவநாதன் கோயிலில் தனி சந்நதியில் காணலாம்.

ஒருமுறை, இவரை தரிசனம் செய்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கிய தேசிகர், கீழே மூலவரான தேவநாதனை வழிபடாமல் பெண்ணை ஆற்றங்கரை நோக்கிச் சென்றார். அப்போது, தன்னை அவர் தரிசிக்காவிட்டாலும், தான் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்று திருவுளங்கொண்ட தேவநாதன் இவருக்கு முன் போய் நின்று காட்சி கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்குத் தன் கடமையில் பேரார்வம் கொண்டிருந்தவர் தேசிகர். ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளன்று தேசிகனை, ஹயக்ரீவர் சந்நதிக்கு எழுந்தருளச் செய்து சிறப்பிக்கிறார்கள்.இந்தத் திருக்கோயிலில் பிரம்மோத்சவம் நடைபெறும் பத்து நாட்களிலும், தேசிகருக்கும் பெருமாளைப் போலவே விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அவருடைய உற்சவ விக்ரகத்துக்கு ரத்னாங்கி அணிவித்து அழகு சேர்த்து மகிழ்கிறார்கள். தேவநாதன் கோயிலில் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன், அனுமனுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார். இந்த ராமரின் தோற்றம் சற்றே வித்தியாசமானது. இடது கரத்தால் வில்லினையும், வலது கரத்தால் அம்பினையும் பற்றியிருக்கிறார். பொதுவாக வலது கரத்திலேயே வில்லைப் பற்றியிருக்கும் இவர் இங்கு இவ்வாறு காட்சி தரும் காரணம் என்ன? எல்லாம் பக்தர்கள் நலம் கருதிதான். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உடனே வலது கையிலிருக்கும் அம்பை இடது கரத்திலுள்ள வில்லில் பூட்டி, அந்த ஆபத்தை உடனே குத்தி எறிந்துவிடும் பரிவுதான் காரணம். இளவல் லட்சுமணனும் அவ்வாறே காட்சியளிக்கிறார். வடலூர் ராமலிங்க அடிகள், ‘வெவ்வினை தீர்த்தருள்கின்ற ராமா’ என்று இவரைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்.

இங்கு தரிசனமளிக்கும் லட்சுமி நரசிம்மரும் வித்தியாசமானவரே. இவர் மஹாலக்ஷ்மியைத் தன் வலது பாகத்தில் ஏந்தியபடி சேவை சாதிக்கிறார். தன்னுடைய இந்த அபூர்வ திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா வளங்களையும் அள்ளித் தருகிறார் இவர்.இவர்கள் தவிர, ராஜகோபாலன், வேணுகோபாலன், ரங்கநாதர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் அமைந்து, கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.மார்க்கண்டேயர் சிவபெருமானிடமிருந்து ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட போதிலும், முக்தியாகிய பேரின்பத்தைத் தன்னால் அடைய முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு மேலிட்டது. அவர் இத்தலத்தின் அருகே சௌகந்திக வனம் என்ற காட்டை அடைந்து தனக்குக் கேட்ட அசரீரி வாக்குப்படி தவம் மேற்கொண்டார்.

அந்த தவத்தின் பயனாக தாமரை மலரைத் தன் இருப்பிடமாகக் கொண்ட மூன்று வயதுப் பெண் குழந்தையை அவர் கண்டார். அந்தக் குழந்தை, அருகிலிருந்த கடல் அலைகளைப் பார்த்து மகிழ்ந்ததால், அதற்கு தரங்காநந்தினி (தரங்கம் என்றால் அலை; ஆனந்தினி என்றால் மகிழக் கூடியவள்) என்றுப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் திருமணப் பருவத்தை எட்டியபோது, ஒரு தந்தைக்குரிய கடமையினை நிறைவேற்ற வேண்டுமே என்று பொறுப்பால் வேதனை கொண்டார் மார்க்கண்டேயர். மீண்டும் அசரீரி. மீண்டும் பெருமாள் வழிபாடு. எம்பெருமான் அவருக்குப் பிரத்யட்சமாக, தன் மகளை அவர் ஏற்க வேண்டும் என்றும், அந்தத் தலத்திலேயே அவர் நிலை கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் மார்க்கண்டேயர்.

உடனே ஆதிசேஷன், பெருமாள் தங்குவதற்கு வசதியாக இங்கே ஒரு நகரத்தையே சிருஷ்டித்தார் என்கிறது புராணம். இந்த நகரை பெருமாளுக்கு அர்ப்பணித்ததால் இது திருஅசீந்திரபுரம் என்று வழங்கப்பட்டது. தேவநாதப் பெருமாளுக்கு, வருடம் பூராவும், ஒவ்வொரு நாளும் உற்சவத் திருநாளே! குறிப்பாக புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். தினமுமே பக்தர்கள் பெருமாள் சந்நதிக்கு முன் திருமண பந்தத்தில் ஒன்றுபடுகிறார்கள். பக்கத்து மலைமீது 74 படிகளை ஏறிச் சென்றால் ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது. இந்த 74 படிகளும் ராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது. மலைமீது நிலவும் ஏகாந்தமும், மூலிகை மணம் சுமந்துவரும் மென்காற்றும் நம் உள்ளத்தையும், உடலையும் வருடிச் செல்கிறது. இந்த மலையை ஔஷத கிரி என்கிறார்கள். போரில் மூர்ச்சித்திருந்த லட்சுமணனைக் காப்பதற்காக அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்தபோது, அந்த மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மலை என்கிறது புராணம். அதோடு, சஞ்சீவி மலையில் அனுமனுக்கு சஞ்சீவி மூலிகையை அடையாளம் காட்ட ஹயக்ரீவர் உதவினார் என்றும் புராணம் விவரிக்கிறது. அனுமன் எடுத்துச் சென்றபோது கீழே விழுந்த மலையின் ஒரு பகுதியோடு ஹயக்ரீவரும் சேர்ந்து இங்கே தரையிறங்கினார்.

முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரோடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம்பரமன்

– என்று ஹயக்ரீவரைப் பாடித் தொழுதிருக்கிறார் திருமங்கையாழ்வார். இந்தப் பரிமுகன், கல்வியும், ஞானமும் அருளவல்லவர். பரீட்சைக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஐஏஎஸ் போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்றுச் சென்று வெற்றிவாகை சூடுகிறார்கள். பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் இந்த ஹயக்ரீவர் சந்நதியில் கால் பதித்தாலே உடனடி நிவாரணம் பெறுகிறார்கள். கிரகங்கள் அல்லது வேறுவகை தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.இந்த ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக ஒரு ஸ்லோகம் இருக்கிறது:

ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே

– அதாவது, ஞானமயமாகத் திகழ்கிறார் ஹயக்ரீவர். கலக்கமற்ற ஸ்படிகம் போல ஒளிர்பவர். இவரே அனைத்து வித்தைகளுக்கும் ஆதாரமானவர். இவரை உபாசித்தால் கல்வி, ஞானத்தில் மேம்பட முடியும் என்று பொருள். தியான ஸ்லோகம்திருவஹீந்திரபுரம் சென்று தேவநாதனையும், ஹயக்ரீவரையும் தரிசிக்கும்வரை கீழ்க்காணும் த்யான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

சித்தேமே ரமதாம் அஹீந்த்ர நகராவாஸீ துரங்கோந் முகா நந்த:
ஸ்ரீ ஸகதைவ நாயக ஹரி: தேவேந்த்ர ஸாக்ஷாத் க்ருத:
பூர்வாம் போதி முக: ககேந்த்ர ஸரிதஸ் தீராச்ரயஸ் ஸர்வதா,
ச்லாக்யே சந்த்ர விநிர் மிதேச பகவாந் திஷ்டந் விமாநோத்தமே
– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்:

அஹீந்த்ர நகர் எனும் திருவஹீந்த்ரபுர திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் தெய்வநாயகன் என்ற தேவநாதப் பெருமாளே நமஸ்காரம். வைகுண்டநாயகித் தாயாருடன், சந்திரனால் அமைக்கப்பட்ட இந்திர விமான நிழலில், கருட நதி தீரத்தில், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் எம்பெருமானே நமஸ்காரம். தேவேந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாளே, என் சித்தத்தையும் இன்புறச் செய்வீர்களாக.

எப்படிப் போவது?

கடலூரிலிருந்து 5 கி.மீ தொலைவு. சென்னை-கடலூர் ஈ.ஸி.ஆர். சாலை வழியாகவும் செல்லலாம். பேருந்து வசதி உண்டு.

எங்கே தங்குவது?

கடலூரில் தங்கிக்கொள்ளலாம். தங்குவதற்கும், உணவுக்கும் நிறைய வசதிகள் இங்கே உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்?

காலை 6.30 முதல் மதியம் 12 மணிவரை: மாலை 4 முதல் 8.30 மணிவரை.

M. லட்சுமி

The post படிப்பு வரமருளும் பரிமுகப்பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Baltic Sea ,Bharandaman ,Narayan ,Vaikundam ,
× RELATED அரங்கமா நகருளானே!