×

சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்; பாக்.கை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: சீனாவை விட 3 மடங்கு குறைவு

புதுடெல்லி: பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், கடந்த ஆண்டில் இந்தியா தனது அணு ஆயுதங்களை சிறிது விரிவுபடுத்தியிருப்பதாகவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) அறிக்கை வெளியிட்டுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளாக உள்ளன.

இந்நிலையில் தற்போதைய அணு ஆயுதங்களின் நிலவரம் தொடர்பாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிடம் 180 அணு ஆயுதம் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாக சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் உள்ளன.

உலகளவில் 12,241 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் திறன் கொண்ட போர்க்கப்பல்கள் இருப்பதாகவும், இதில் 9,614 கப்பல்கள் ராணுவத்தில் செயல்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் இந்தியா தனது அணு ஆயுதங்களை சிறிது விரிவுபடுத்தி இருப்பதாகவும், இதே போல பாகிஸ்தானும் புதிய அணு ஆயுத அமைப்புகளை உருவாக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் இருநாடுகளின் அணு ஆயுதங்கள் மேலும் விரிவடையும் என்பதை காட்டுவதாக சிப்ரி அறிக்கை கூறி உள்ளது.

சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் வழக்கமான மோதல் அணு ஆயுத மோதல் நெருக்கடியை ஏற்படுத்தியதாக கூறி உள்ளது. ஆயுதக் கட்டுப்பாடு விதிகள் பலவீனமடைந்து வரும் நிலையில், அபாயகரமான புதிய அணு ஆயுத போட்டி வலுவடைந்து வருவதாகவும் சிப்ரி அறிக்கை கூறி உள்ளது.

The post சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்; பாக்.கை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: சீனாவை விட 3 மடங்கு குறைவு appeared first on Dinakaran.

Tags : International research institute ,India ,Pakistan ,New Delhi ,Stockholm International Peace Research Institute ,SIPRI ,US ,Russia ,UK ,France ,China ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...