×

இம்ரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாக். உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆளும் கட்சியினர் போராட்டம்: தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம்

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு ஆளும் கூட்டணி கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9ம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியினர் 7,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இம்ரானின் கைது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், இஸ்லாமாபாத் நீதிமன்றம் புதிய வழக்குகளில் இம்ரானை கைது செய்ய 2 வார காலம் தடை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்நிலையில், ஒட்டுமொத்த நீதித்துறையும் இம்ரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) உட்பட அதன் 13 கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டக்காரர்கள் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற வளாகப் பகுதிக்குள் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உச்ச நீதிமன்றம் முன்பாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பண்டியாலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் இம்ரானுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

The post இம்ரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாக். உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆளும் கட்சியினர் போராட்டம்: தலைமை நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Pak ,Imran ,Supreme Court ,Parliament ,ISLAMABAD ,Imran Khan ,Dinakaran ,
× RELATED வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு