×

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தில் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் வெயில் கொடுமைக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மக்களவை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அந்த மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதும், அங்கு தேர்தல் ஊழியர்களே வெயிலுக்கு பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப அலை காரணமாக 10 தேர்தல் அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகி விட்டனர். இதை மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் உறுதி செய்துள்ளது. போஜ்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 தேர்தல் அதிகாரிகள் பலியாகி விட்டனர். ரோஹ்தாஸில் 3 தேர்தல் அதிகாரிகளும், கைமூர் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்தனர். மற்ற 4 பேர் வெவ்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெப்ப அலைக்கு பலியாகி விட்டனர். இவர்கள் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் வெப்ப அலையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களை மட்டும் கல்வித்துறை வரவழைத்ததால் அவர்கள் பலியாகி விட்டது தெரிய வந்துள்ளது.

உபியிலும் 15 தேர்தல் பணியாளர்கள் பலியாகி விட்டனர். உபி மாநிலம் மிர்சாபூரில் கடும் வெயில் நிலவுகிறது. அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகி விட்டனர். இறந்தவர்களில் ஏழு ஊர்க்காவல் படையினர், மூன்று துப்புரவு பணியாளர்கள் ஆவார்கள். இதே போல் சோன்பத்ரா மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்தனர். 9 தேர்தல் பணியாளர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் அதிகபட்சமாக 117 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், 23 பேர் வெப்பத்தால் பலியாகினர். சுந்தர்கார் மாவட்டத்தில் 12 பேர் பலியாகி விட்டனர். ஜாகர்சுகுடா மாவட்டத்தில் 6 பேரும் பலியாகி விட்டனர். பாலாசோர், தேன்கனல், மயூர்பஞ்ச், சோன்பூர், போலன்கீர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகி விட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலையால் 4 பேர் பலியாகி விட்டனர். 1326 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். அங்கு நேற்று மட்டும் கடும் வெயிலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

 

The post நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார்...