ராமநாதபுரம் தொகுதியில் பாஜ கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக 5 பன்னீர்செல்வங்கள் களம் இறங்கியுள்ளனர். இதில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பன்னீர்செல்வங்களுக்கு திராட்சை பழம், கண்ணாடி டம்ளர், கரும்பு விவசாயி, வாளி, பட்டாணி என சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர மற்ற பன்னீர்செல்வங்கள் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தனர். இதனால் பெரிய அளவில் குழப்பம் எழவில்லை. இந்தநிலையில் வாளி மற்றும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடக்கூடிய பன்னீர்செல்வங்கள் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ‘ஐயா ஒபிஎஸ் அவர்களுக்கு வாளி சின்னத்தில் வாக்களிப்பீர்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதேபோல், கரும்பு விவசாயி, திராட்சை கொத்து சின்னங்களிலும் ஒபிஎஸ் பெயரில் ஓட்டு கேட்டு தனித்தனி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை பார்க்கும் வாக்காளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சை தொண்டர்கள் ‘ஐயா’ என அழைப்பது வழக்கம், சுவரொட்டிகளில் ‘ஐயா ஒபிஎஸ்’ என அச்சடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுவரொட்டிகளையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்து வருகின்றனர். தான்தான் ஒரிஜினால் ஓபிஎஸ் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செலவ்ம் கூறி உள்ள நிலையில், அவரை டூப்ளிக்கேட்டுகள் ரவுண்டு கட்டுவதால் நொந்து நூடூல்சாகி வருகிறார்.
* பாஜவினருக்கு ‘மோடி அல்வா’ ஊட்டிவிட்ட கலா மாஸ்டர்
ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணம் மீட்கப்படும், ஓவ்வொருவர் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் போடப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவோம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் கடந்த நாடளுமன்ற தேர்தல் வரை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு கூறி வந்தது. ஆனால் அவர்கள் அளித்த ஒரு வாக்குறுதிகளை கூட தற்போது வரை நிறைவேற்றவில்லை. மோடி அரசின் ஏமாற்று வேலைகளை பொதுமக்களிடம் கொண்டும் செல்லும் விதமாக திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ‘மோடி கொடுத்த அல்வா’, ‘மோடி சுட்ட வடை’ என அல்வா கிண்டியும், வடை சுட்டும் மக்களுக்கு வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நெல்லை இருட்டுக்கடை அல்வாவை போல் ‘மோடி அல்வாவும்’ தமிழகத்தில் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் வாகனத்தில் நின்றபடி கலா மாஸ்டர், பிரசாரம் செய்தார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள கடையில் அல்வா வாங்கி கடைக்காரருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் கலா மாஸ்டர் ஊட்டி விட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ‘‘தேர்தலே இன்னும் முடியவில்லை. அதற்குள் அனைவருக்கும் மோடி அல்வா ஊட்டுகிறாரே.. அவருக்கு முடிவு முன்கூட்டியே தெரிந்து விட்டதோ என்னமோ?’’ என்று முனுமுனுத்தபடி சென்றனர்.
* அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய மாட்டோம்: சுயமரியாதை முக்கியம் என பாமக மாவட்ட செயலாளர் கொந்தளிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக உள்ளது. இதில், பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், பாஜவினர் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு எங்களை அழைக்கவில்லை என கூறி தேர்தல் பணியில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் விலகுவதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேட்பாளர் (அண்ணாமலை) பாமக அலுவலத்திற்கு வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. 6 தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, பிரசாரத்திற்கும் அழைக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதி வெளியீட்டு நிகழ்வுக்கும் பாமகவுக்கு அழைப்பு இல்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான் அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜ தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை. ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில்தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மவுனமாய் வெளியேறுகிறோம்’’ என்று கூறியுள்ளார். இதே தகவலை பாமக கோவை மகளிரணி மாவட்ட செயலாளர் சுதாவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் பாமக-பாஜ கூட்டணிக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* மிரட்டலால் திடீர் பல்டி
அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கூறிய பாமக கோவை மாவட்ட செயலாளர் கோவை ராஜ் (எ) ராஜகோபால் சில மணி நேரங்களில் பல்டி அடித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாமக மாவட்ட செயலாளர் ராஜ், ‘‘நான் சொன்னதாக சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் வரும் செய்திகள் தவறானது. வாட்ஸ்அப் தகவல் வைத்து கூறியுள்ளனர். என்டிஏ கூட்டணி சார்பில் பாஜ தலைவர் அண்ணாமலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கோவை பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யும்’’ என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலிடத்தில் இருந்து வந்த மிரட்டலையடுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
* அதிமுக ஆட்சி ஊழல் குறித்து சிறப்பு விசாரணை: கோவைக்கான பாஜ தேர்தல் அறிக்கையில் அண்ணாமலை அறிவிப்பு
கோவை அவினாசி ரோட்டில் உள்ள பாஜ தேர்தல் அலுவலத்தில் கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கோவைக்கு 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும். கோவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் குறைதீர்ப்பு மையமாக செயல்படும். கோவை விமான நிலையம் உலக தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். ஒன்றிய அரசின் 4 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். தேசிய விளையாட்டு ஆணையத்தின் பாட்டியலாவின் கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும். பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
கோவையில் ஐஐஎம் கொண்டு வரப்படும். கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கப்படும். 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும். காமராஜர் நினைவாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 3 புட் பேங்க் (உணவகம்) செயல்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு ஒன்றிய அரசு வழங்கிய அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி குறித்து சிறப்பு தணிக்கை செய்யப்படும். இந்த தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகள் மீதும், அதற்கு காரணமானவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் உள்பட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில், ஸ்மார்ட் சிட்டி பணிக்கு வழங்கிய நிதி சிறப்பு தணிக்கை செய்யப்படும் என ‘என் கனவு நமது கோவை’ என்ற தலைப்பில் கோவை மக்களுக்கு 100 வாக்குறுதிகளை அண்ணாமலை அளித்துள்ளார். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்கான நிதி அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், தற்போது பாஜவின் தேர்தல் அறிக்கையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* அண்ணாமலை மீண்டும் ஆடு மேய்க்க செல்வார்
மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேசுகையில், ‘‘இந்த தேர்தலில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி. எடப்பாடியை பற்றி விமர்சிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. அண்ணாமலை மக்களுக்காக எந்த தியாகமும் செய்யவில்லை. ஒன்றியத்தில் ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு விமர்சிக்கிறார். எந்தவித தகுதியோ, திறமையோ இல்லாதவர் தான் அண்ணாமலை. ஆனால் பாஜவில் இருந்து கொண்டு தனக்கு தகுதி இருப்பது போல காட்டுகிறார். 2024ல் அண்ணாமலை பதவிக்கு கண்டம் வந்துவிடும். இந்த தேர்தலில் பாஜ 5வது இடத்திற்கு சென்று விடும். இதனால் தேர்தல் முடிந்ததும், அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ஆடு மேய்க்க சென்று விடுவார்’’ என்றார்.
The post ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி appeared first on Dinakaran.