×

ஊட்டி-கூடலூர் சாலையில் விரிவாக்கம் மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி-கூடலூர் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனுமாபுரம் முதல் கூடலூர் வரை பல்வேறு இடங்களில் மழைநீர் வழிந்தோட வசதியாக சாலையின் குறுக்கே நிலத்தடி கால்வாய்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை பிற சமவெளி பகுதிகளுடன் இணைக்க கூடிய முக்கிய சாலையாக மேட்டுபாளையம் – ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை மைசூர் வரை செல்கிறது.

நீலகிரிக்கு அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள் போன்றவைகள் இச்சாலை வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. இது தவிர கோவை உள்ளிட்ட இதர சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குன்னூர் வழியாகவும், கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்கள் கூடலூர் வழியாகவும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் சமயங்களில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனை சரி செய்யும் நோக்கில் இச்சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை பொறுத்த வரை ரூ.138 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி மரப்பாலம் முதல் குன்னூர் வரை 14 கிமீ ரூ.35 ேகாடி மதிப்பிலும், குன்னூர் முதல் ஊட்டி வரை 14 கிமீ தூரத்திற்கு ரூ.27 கோடி மதிப்பிலும், டிஆர் பஜார் முதல் கூடலூர் வரை ரூ.76 கோடியிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை குறுகலாக இருந்த இடங்கள், விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிந்து விரிவாக்கம் செய்து தடுப்புச்சுவர் அமைத்தல், மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மரப்பாலம் முதல் குன்னூர் வரை பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒராண்டிற்கும் மேலாக குன்னூர்-ஊட்டி இடையை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றும் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், பிளேக்பிரிட்ஜ், பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு, எல்லநள்ளி மந்தாடா உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன.

இதனால், அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய சூழலும் நிலவி வருகிறது. இங்கு உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஊட்டி வேலிவியூ முதல் தலைக்குந்தா வரை விரிவாக்க பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அனுமாபுரம் முதல் கூடலூர் வரை சாலையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி குழாய், கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய மழை காரணமாக வாகனங்கள் சென்று வந்ததில் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் சேரும் சகதியுமாக மாறி காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக அரசு பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சிக்கி கொள்ள கூடிய சூழலும் நிலவுகிறது.

The post ஊட்டி-கூடலூர் சாலையில் விரிவாக்கம் மழைநீர் வழிந்தோட வசதியாக நிலத்தடி கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty-Kudalur road ,Ooty ,Anumapuram ,Kudalur ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...