×

ஒலிம்பிக் தொடக்க விழா ஆல்பம்!

* சீனாவுக்கு முதல் தங்கம்!
33வது ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற பெருமையை சீனா தட்டிச் சென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் சீனாவின் யூடிங் ஹூவங், ஹவ்ரன் யாங் இணை முதலிடம் பிடித்து முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ரமிதா, அர்ஜூன் 6வது இடமும், இளவேனில் வாலறிவன், சந்தீப் சிங் 12வது இடமும் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தனர். தென் கொரியா வெள்ளி, கஜகஸ்தான் வெண்கலம் வென்றன.

* மகளிர் 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு டைவிங் பிரிவிலும் சீனாவின் சாங் சென் தங்கம் வென்று அசத்தினார். இதனால் 2வது தங்கத்தையும் சீனாவே கைப்பற்றியது. இந்த போட்டியில் அமெரிக்க, கிரேட் பிரிட்டன் வீராங்கனைகள் வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.

* பைனலில் மனு பாக்கர்
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்திய வீராங்கனை மனு பாக்கர் (22 வயது) தகுதி பெற்றார். தகுதிச் சுற்றில் மொத்தம் 580 புள்ளிகளைக் குவித்த மனு பாக்கர் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 12வது இடம் பிடித்த மனு, தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

* பதக்க நம்பிக்கை பல்ராஜ் பன்வார்
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் துடுப்புப் படகு ஸ்கல்ஸ் பிரிவு முதல் தகுதிச் சுற்றில் (ஹீட்) பங்கேற்ற இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7 நிமிடம், 7.11 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து 4வது இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து, காலிறுதிக்கு முன்னேற மறுவாய்ப்பாக ‘ரெபஷேஜ்’ போட்டியில் அவர் இன்று களமிறங்குகிறார். ராணுவ வீரரான பல்ராஜ் இதில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல போராடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* களத்தில் இந்தியா இன்று…
பிற்பகல் 12.45: மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் (தகுதிச்சுற்று) இளவேனில் வாளறிவன், ரமிதா ஜிண்டால்
பிற்பகல் 12.50: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் ஆட்டம் – பி.வி.சிந்து
பிற்பகல் 1.06: துடுப்புப் படகு (ரெபஷாஜ்) பல்ராஜ் பன்வார்
பிற்பகல் 2.15: டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் (ஆர் 64) ஸ்ரீஜா அகுலா
பிற்பகல் 2.30: ஆண்கள் 100 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் (ஹீட்ஸ்) ஸ்ரீஹரி நடராஜ்
பிற்பகல் 2.30: மகளிர் 200 மீ. ஃபிரீஸ்டைல் நீச்சல் (ஹீட்ஸ்) தினிதி தேசிங்கு
பிற்பகல் 2.45: ஆண்கள் 10 மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிசுடுதல் (தகுதிச்சுற்று) சந்தீப் சிங், அர்ஜுன் பபுதா
பிற்பகல் 3.00: ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் (ஆர் 64) சரத் கமல்
பிற்பகல் 3.30: மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் (பைனல்) மனு பாக்கர்
பிற்பகல் 3.30: டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் (முதல் சுற்று) சுமித் நாகல்
பிற்பகல் 3.50: பாக்சிங் மகளிர் 50 கிலோ (ஆர் 32) நிக்கத் ஜரீன்
மாலை 4.30: டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் (ஆர் 64) மனிகா பத்ரா
மாலை 5.45: மகளிர் குழு வில்வித்தை (காலிறுதி) தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத்
இரவு 8.00: பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் (குரூப்) எச்.எஸ்.பிரணாய்

* லக்‌ஷியா சென் வெற்றி
ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷியா சென், கவுதமாலாவின் கெவின் கார்டனுடன் நேற்று மோதினார். அதிரடியாக விளையாடிய லக்‌ஷியா 21-8 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் கெவின் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் இழுபறியாக நீடித்தது. எனினும், பதற்றமின்றி விளையாடிய லக்‌ஷியா 21-8, 22-20 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post ஒலிம்பிக் தொடக்க விழா ஆல்பம்! appeared first on Dinakaran.

Tags : Olympic Opening ,China ,33rd Olympic Games ,Yuting Huang ,Huron Yang ,Dinakaran ,
× RELATED நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!