×

அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

*குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர் : மழையால் பாதிக்கப்பட்ட மணிலா பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.இதையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்களாகவும் அளித்தனர். மேலும் சிலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:

அண்ணாகிராமம் ராமானுஜம்: சித்தேரி வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியத்தில் விவசாய கருவிகள் கேட்டு விண்ணப்பித்தாலும் எந்த விவசாய கருவிகளும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவாலக்குடி முருகானந்தன்: ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவாலக்குடி கிராமத்திற்கும் புவனகிரி தாலுகா பி.ஆதனூர் கிராமத்திற்கு இடையில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.
ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம வயல்வெளிகளில் அளவுக்கு அதிகமான மயில்கள் உலவுவதால் பயிர்களையும், தானியங்களையும் சேதப்படுத்துகின்றன. எனவே மயில்களை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கானூர் பெரிய ஏரியில் அனைத்து கிராமங்களையும் சேர்ந்த விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டை கற்பனைச்செல்வம்: கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வடக்கு பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கிள்ளை தெற்கு, கிள்ளை வடக்கு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மணிலா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட மணிலா பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் மாதவன்: குறுவை நெற்பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை. அதனால் உரிய தொகை வழங்க வேண்டும். பூதங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். திட்டக்குடியில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. காட்டு பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மங்களூர் அருள்வேல்: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மங்களூர் பகுதியில் முறையாக வேலை நடைபெறவில்லை. ஆனால் வேலை நடந்ததாக மட்டும் பில் போட்டு பணத்தை எடுத்து கொள்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்ருட்டி தேவநாதன்: பண்ருட்டி பகுதியில் உள்ள மூன்று ஏரிகளை தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. உளுந்தாம்பட்டில் உள்ள புதிய நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் கலியபெருமாள்: என்எல்சி நிறுவனத்தால் 1956ல் குடியமர்த்தப்பட்ட புது கூரைப்பேட்டை கிராமத்தில், வயல்வெளி சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த வயல்வெளி பாதையை மெட்டல் சாலையாக அமைத்து தர வேண்டும்.

எங்கள் பகுதி வயல்வெளி பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நாங்கள் பயிர் வைக்கவே அச்சப்படுகிறோம். எனவே வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

The post அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manila ,Dinakaran ,
× RELATED குப்பை கிடங்கில் தீ விபத்து