×

வாலாஜாபாத் அருகே கோயில் வாசலில் பயங்கரம்: பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை

* உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் வீச்சு
* காரில் கடத்தி மர்ம கும்பல் வெறிச்செயல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ளது. காரில் கடத்தி மர்ம கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித் (25). பிரபல ரவுடியான இவர், கஞ்சா போதைக்கு அடிமையானவர். கஞ்சா புகைத்தால் அவ்வளவுதான். அக்கம் பக்கத்தில் சண்டை போடுவது, பொதுமக்களை அடித்து உதைப்பது, அச்சுறுத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இருப்பினும் எதையும் அஜித் கண்டு கொள்ளவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு செல்வாராம். தொடர்ந்து இதுபோன்று தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது ஏராளமானோர் புகார் செய்தனர். அந்த வகையில் வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு, கொலை, அடிதடி, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்த அஜித், வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை செல்லியம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்தார். அங்கு கட்டிலில் ஹாயாக அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த வீட்டின் உரிமையாளர், திரும்பி வந்தபோது, அஜித் ஹாயாக டிவி பார்த்து ெகாண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ‘நீ யார்’ என கேட்டுள்ளார். அவரிடம் அஜித் தகராறு செய்தார்.

உடனே அதிரடியாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர், கதவுகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிந்து செய்து சிறையிலடைத்தனர். கடந்த மாதம்தான் சிறையில் இருந்து அஜித் வெளியே வந்தார். இதுபோன்று சிறுசிறு குற்ற வழக்குகளில் அவ்வப்போது சிறைக்கு சென்று வந்தார். தொடர்ந்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் நாளுக்கு நாள் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார் அஜித். இந்நிலையில் நேற்றிரவு வாலாஜாபாத் பகுதியில் நின்றிருந்தார் அஜித்.

அந்த நேரத்தில் ஒரு கார், அவர் முன்பு வந்து நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் அஜித்தை அந்த கும்பல் காரில் அலாக்காக தூக்கி போட்டு கடத்தி சென்றது. பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அஜித்தை சரமாரியாக அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது. பின்னர் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளனர். உடலை முத்தியால்பேட்டை அடுத்த வள்ளுவப்பாக்கம் காலனி பகுதியில் உள்ள கோயில் வாசலில் தலையை தாங்கி பகுதியிலும் வீசி விட்டு மர்ம கும்பல் தப்பியது. இன்று காலையில் உடல் மற்றும் தலை கிடந்த பகுதி வழியாக பொதுமக்கள் சென்றபோது கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனே வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று தலை மற்றும் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அஜித் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டாரா அல்லது சிறையில் இருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தீர்த்துக்கட்டப்பட்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post வாலாஜாபாத் அருகே கோயில் வாசலில் பயங்கரம்: பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : Wallajabad ,Walajabad ,
× RELATED வாலாஜாபாத் அரசு பள்ளியின் விளையாட்டு...